இயற்கை எய்திய மருத்துவ கலாநிதி ஜெயகுலராஜா அவர்கள்
எமது தெசத்தின் கலங்கரை விளக்கம்.(Beacon of the Nation)
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறுவுனர்களில் ஒருவரும் , வெண்புறா அமைப்பின் தலைவரும், தமிழீழ மருத்துவத் துறையின் ஆலோசகருமான மருத்துவ கலாநிதி திரு ஜெயகுலராஜா அவர்கள் 16-06-2024 அன்று முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் இயற்கை மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் காலமானார். இவருக்கு புனர்வாழ்வுக் கழகம் சார்பாக எமது அகவணக்கத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கலாநிதி திரு ஜெயகுலராஜா அவர்களின் மறைவு தமிழினத்திற்கு பேரிழப்பாகும். கடந்த 40 ஆண்டுகளாக எமது தேசத்திற்காகவும், தேச விடுதலைக்காகவும் இறுதிவரைக்கும் தன் மண்ணில் இருந்து பணியாற்றி, விட்டுக்கொடுப்புக்களுக்கு இடமின்றி இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வழிகாட்டியவர்.
1984 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 18 ஆம் நாள் இந்தியாவில் வட தமிழகத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பதிவு செய்யப்பட்டது. இதன்போது மருத்துவர் ஜெயகுலராஜா அவர்கள் புனர்வாழ்வு, மருத்துவ பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி செயற்பட்டு வந்தார். அதன் பின்னர் தாயகத்தில் புனர்வாழ்வுக் கழகம் , வெண்புறா ஆகியவற்றிற்கு தலைவராகவும் ஆலோசகராகவும் பணியாற்றியதுடன் தமிழீழ மருத்துவத் துறைக்கும் ஆலோசகராக செயற்பட்டுவந்தார்.
தவிர பல்வேறு அரச, அரச சார்பற்ற அமைப்புக்களுக்கும் ஆலோசகராக பணியாற்றியதுடன் , முல்லை மாவட்டத்தில் அரச மருத்துவ அதிகாரியாகவும் சேவையாற்றியுள்ளார். யாழ் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவரும், யாழ் பரியோவான் கல்லுரியின் தாய் அமைப்பான ஊhரசஉh ஆளைளழையெசல ளுழஉநைவல (ஊ ஆ ளு ) அமைப்பின் முகாமையாளர் மற்றும் ஆட்சி உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். தமிழீழ மக்களின் கல்வி, சுகாதாரம், மறுவாழ்வு, ஆரம்ப சுகாதாரம், சிறார் போசாக்கு ஆகிய பணிகளில் போர்க்காலங்களிலும், இயற்கை அனர்த்த காலங்களிலும் நேரடியாகக் களத்தில் நின்று பணியாற்றியுள்ளார்.
கடந்த 40 வருடங்களாக எமது தேசவிடுதலையுடன் ஒன்றுபட்டு , பல்வேறு நெருக்கடியான காலங்களிலும் தாயகத்தில் இருந்து மக்களோடு மக்களாக வாழ்ந்து பணிசெய்து இயற்கை எய்தியுள்ளார். இவரது அர்ப்பணிப்பு, அஞ்சாமை, மனித நேயம், ஆற்றல், விலைபோகாமை, தேசப்பற்று உள்ளடங்கலான பணிகளால் எமது தேசத்தின் கலங்கரை விளக்கமாக வரலாற்றில் இடம்பெற்று இருக்கின்றார். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கே.பி.றெஜி
நிறைவேற்றுப்பணிப்பாளர்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் |