.
 
 

தமிழர் விளையாட்டு விழா - 2022
பத்திரிகைச் செய்தி 26-07-2022

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் - பிரான்ஸ் இணைந்து நடாத்திய 23வது தமிழர் விளையாட்டு விழா, கடந்த 24-07-22 ஞாயிற்றுக்கிழமை வழமையான L’Aire des Vents Dugny திடலில் சிறப்பாக நடைபெற்றது.

திடலில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் தமிழர் தேசியக் கொடி, தேசியச் செயற்பாட்டாளர் திரு நாயகன் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள், பொதுமக்கள், போரினால் மடிந்த சமூகசேவையாளர்கள் மற்றும் தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த தமிழ்நாட்டு உறவுகளையும் நினைவேந்தி அமைக்கப்பட்ட வணக்க நினைவுத் தூபியின் முன் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பிரதான பொதுச்சுடரினை திருமதி. பாலசிங்கம் சரஸ்வதி அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடக்க நிகழ்வின் போது சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்த சென் செந்தெனிஸ் மாகாண அவைத்தலைவர் திரு. ஸ்ரிபன் துரூசல், சென் செந்தெனிஸ் மாகாண அவை உறுப்பினர் திருமதி. சாய்நபா ஸசத் அன்சும். செவ்ரோன் நகரபிதா திரு. ஸ்டெபன் ப்ளோசே மற்றும் துணைநகரபிதா திருமதி. செரிபா மேக்கி. லா கூர்நெவ் துணைநகரபிதாக்களான திரு. உமாறு டுக்கூறே, திரு. பக்கார் சொலிகி மற்றும் நகரசபை உறுப்பினரான திருமதி. சுகுர்ணா சிறீகணேஸ், ரான்சி நகரசபை உறுப்பினரான திரு. அலன் ஆனந்தன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக தொடர்பாடல் அமைச்சர் சிவசுப்ரமணியம் மகிந்தன், தொழிலதிபர் திரு. பாலச்சந்திரன் ஆகியோர் இவ்வரவேற்பு நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

திருமதி. அனுசா மணிவண்ணன் அவர்களின் நெறியாள்கையில் தமிழிசை நடன வடிவமான இனியத்தின் வரவேற்புடன், சிறப்பு விருந்தினர்கள், தமிழர் புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டாளர்கள், தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகள், தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வருகை தந்த மக்கள் அனைவரும் கொடிக் கம்பம் வரை அழைத்து வரப்பட்டனர்.

பிரான்ஸ் நாட்டு தேசியக் கொடியினை திரு. ஸ்ரிபன் துரூசல் அவர்களும், ஐரோப்பிய பாராளுமன்ற கொடியினை திரு. அலன் ஆனந்தன் அவர்களும், தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கொடியினை தலைவர் திரு. கோணேஸ்வரன் அவர்களும் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்து.

மங்கள விளக்கினை சிறப்பு விருந்தினர்கள் கூட்டாக ஏற்றி வைத்தனர். இனியத்தினை இனிதாய அணிவகுத்த கலைஞர்கள், பயிற்றுவித்த நெறியாளர் ஆகியோருக்கான மதிப்பளிப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகின.

மேலும் இந்நிகழ்வில் லு பூர்ஜே நகரபிதா திரு. ஜான் பதிஸ்த் போர்சாலி, பொபினி நகரபிதா திரு. அப்டேல் சடி உள்பட பல அரச பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

விளையாட்டுப் போட்டிகள் :

கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில். 20 அணிகள் பங்குபற்றியது. கயிறுழுத்தல் போட்டிகளிலும் பல அணிகள் கலந்துகொண்டு பங்குபற்றி சிறப்பித்தனர். சிறந்த பந்துக்காப்பாளர், சிறந்த பந்து உதைப்பாளர், கரம், சதுரங்கம், சாக்கோட்டம், முட்டியுடைத்தல், தலையணைச் சண்டை, சங்கீதக் கதிரை, குறுந்தூர மரதன், குறிபார்த்துச் சுடுதல் மற்றும் மக்களின் மனங்கவர் போட்டிகளுடன் சிறுவர் விளையாட்டுக்களும் இடம்பெற்றது. அனைத்துப் போட்டிகளையும் தமிழர் விளையாட்டு விழாவின் விளையாட்டிற்கான ஏற்பாட்டுக் குழுவினரால் நாடாத்தப்பட்டன.

கலையரங்கு :

தென்றல் இசைக்குழுவினர் வழங்கிய இசைநிகழ்ச்சி, பார்வையார்கள் பங்குபற்றிய பாடுவோர் பாடலாம், பாலம் படைப்பகம் வழங்கிய நாடகம், ஆகிய நிகழ்வுகள் அரங்கினை சிறப்பித்திருந்தன. தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்த கவிஞர் கு.வீரா, வேலணையூர் கவிஞர் சுரேஸ், கவிஞர் வெற்றி துஸ்யந்தன் ஆகியோரது “வரலாற்றை நினை….வளையாது பனை” எனும் கவியரங்கம் இடம்பெற்றது.

குடில்கள் :

மக்கள் தொடர்பாடல் திடலில் ஏற்றிவைத்த தமிழர் தேசியக் கொடி பட்டொளிவீச, வர்த்தக நிறுவனங்கள், அரசியல் அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள் குடில்களை அமைத்திருந்தன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட, தமிழர்கள் தமது அரசியல் தலைவிதியினை தாமே தீர்மானிக்கும் உரிமையினை வலியுறுத்தும் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் மாதிரி வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து வாக்களித்திருந்தனர். உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோத்தபாய கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தக் கோரும் கையெழுத்து சேகரிப்பும் சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

சுட்டெரித்த கோடை வெயிலுக்கு நடுவே, தாயகச் சுவையினை நாவில்பட கைகளில் கூழுடன் நிழலைத் தேடி ஒதுங்கிய மக்கள் கூட்டம். நடுவே சில்லென்று வீசிய காற்றினை துளைத்து சிறார்களும், பெரியோர்களும் பட்டங்களை ஏற்றி மகிழ்ந்தனர்.

கெமருன் நாட்டு கலைஞர் பிரான்ஸ்கோவின் பொய்க்கால் உயர்ந்த மனிதன், பார்போரை நிமிர வைத்ததோடு, குழந்தைகளுக்கு உற்சாகத்தை கொடுத்திருந்தது.

ஸ்காவ் கலைகூட மாணவர்கள், நெறியாளர் அப்பன் அவர்களின் வழிகாட்டலில் கராத்தே நிகழ்வரங்கு சிறப்பாக இடம்பெற்றது.

பரிசில்கள் :

சிறப்பு விருந்தினர்களாக கலந்த பிரதிநிதிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டாளர்கள், தாயக செயற்பாட்டாளர்கள், துறை சார்விளையாட்டு செயற்பாட்டாளர்கள், தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகள், வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் பல பிரமுகர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கி உற்சாகப்படுத்தினர்.

உள்நுழைவுச் சிட்டை இலக்க நல்வாய்ப்பில் உந்துருளியினை பெற்றுக் கொண்ட குலுக்கல் முறையிலான வெற்றி இலக்கம் 00077 எண் தெரிவாகியது. இவ் உந்துருளியினை சோழன் பல்பொருள் வாணிபம் வழங்குகின்றது.

பிரான்ஸ் தமிழ் சமூகத்தின் அடையாளமாக, பண்பாட்டு ஒன்றுகூடலாக ஆண்டுதோறும் அமையும் தமிழர் விளையாட்டு விழா, கொரோனா வைரஸ் பெருந்தொற்று பொதுமுடக்கத்துக்கு பின்னர் இவ்வாண்டு சிறப்பாக இடம்பெற்றது.

இம்முறை புதிய உள்நுழைவு வாயில் ஊடாக பெருந்திரளான மக்கள் குடும்பம் குடும்பமாக, நண்பர்களாக என இணைந்து கொண்டமை எம்மை உற்சாகப்படுத்தியுள்ளது. தாயகம் நோக்கிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிகளுக்கு உரமூட்டியுள்ளது.

இத்திடலை வழங்கிய Dugny Le Bourget La Courneuve மற்றும் நிகழ்வில் கலந்து சிறப்பித்த Sevran Drancy Bobigny நகரமன்றங்களிற்கும், சென் சென்தெனிஸ் மாகாண அவை மற்றும் சென் சென்தெனிஸ் காவல்துறை அகியோர்க்கும் எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பொதுத்தொண்டே வாழ்வெனக் கொண்டு தன்னலம் கருதாது பணியாற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள், சமூக ஆர்வலர்களின் அரிய சேவையினூடாவே இவ்வாறான பெருமுயற்சிகள் சாத்திமாகின்றது. மக்களிடத்தில் இதனைக் கொண்டு செல்ல பரப்புரைக்களத்தில் பங்காற்றிய கலைஞர்கள், ஊடகங்கள், சமூகவலைத் தளங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம். மகிழ்வுடன் கலந்து சிறப்பித்த எம்மினிய உடன்பிறப்புகளுக்கு சிரமங்கள் ஏதாவது ஏற்பட்டிருப்பின் அவற்றை பெருமனதோடு பொறுத்தருளுமாறும் தொடர்ந்து சேவைகளுடன் இணைந்திருக்குமாறும் தயவுடன் வேண்டிக்கொள்கிறோம்.

5 000ற்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்த இந்நிகழ்வு இரவு 10 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்

 

English