.
 
 

கிளிநொச்சி நகரம் எப்படியிருக்கிறது? ஒரு களக்காட்சி
'பொங்கு தமிழ் இணையத்திற்காக – விதுல் சிவராஜா' 3/14/2010

01 கிளிநொச்சி நகரத்தில் இப்போது மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியிருக்கியுள்ளது சனப் புழக்கம். பாழடைந்திருக்கும் அந்த நகரத்தில் மறுபடியும் சனங்கள் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிதைவுகளும் அழிவுகளுமாக இருக்கிற நகரத்தில் 'இனி என்ன செய்வது?' என்று தெரியாது தடுமாறிக் கொண்டிருக்கும் மனிதர்களைக் கண்டேன். படையினர்களுக்கு மத்தியில் அவர்கள் தங்கள் நாளாந்தத் தேவைகளுக்காக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் அதுவொரு படையினரின் நகரந்தான். அங்கே இருக்கின்ற கடைகளில் பெரும்பாலானவையும் படையினரால்தான் நடத்தப்படுகின்றன. யுத்தம் இல்லை என்றபடியால் படையினருக்கு இந்த மாதிரியான வேலைகளை அரசாங்கம் கொடுத்திருக்கிறது. இப்போது அவர்கள் கடை வைத்திருப்பது முதல் தச்சு வேலைகள் வரையில் பல வேலைகளைச் செய்து நிறையச் சம்பாதிக்கிறார்கள்.

ஏ 9 வீதியில் முன்னர் விடுதலைப் புலிகளின் கிளிநொச்சி நகர காவல்துறை இருந்த கட்டிடத்தில் இப்பொழுது மிகப் பெரிய உணவு விடுதியைப் படையினர் நடத்துகிறார்கள். தெற்கே இருந்து வருகின்ற சிங்களவர்கள் அந்த விடுதியில் சாப்பிட்டு, இளைப்பாறிச் செல்கிறார்கள். இதைப் போல இன்னும் இரண்டு உணவுச் சாலைகளை கிளி. மத்திய கல்லூரிக்கு முன்பாக படையினர் நடத்துகிறார்கள். அங்கே அகதிகள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குகிறார்கள்.

பரந்தனுக்கும் முறிகண்டிக்குமிடையில் இப்படி பத்துக்கு மேற்பட்ட உணவு விடுதிகள் உண்டு. எல்லாமே திறந்த வெளிக்கடைகள். குடைகளின் முன்னே பல வர்ணக் கொடிகள் பறக்கின்றன. அகதிகள், அரசாங்கத் திணைக்களங்களில் பதிவுகளைச் செய்தால்தான் ஏதாவது சிறு உதவிகள் கிடைக்கின்றன. அதற்காக அவர்கள் கிராம அலுவலர், பிரதேச செயலகம், கச்சேரி என்று நடந்து திரிகிறார்கள். நகரத்தின் நடுவே ஊடறுத்துச் செல்லும் ஏ.9 பிரதான வீதிக்குக் கிழக்குப் பகுதியில் யாரும் குடியிருக்க அனுமதிக்கப்படவில்லை. ஆக மேற்குப் பகுதியில் உள்ள கிராமங்களில் சனங்கள் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கு. இதிலும் சில கிராமங்கள் விதிவிலக்கு. குறிப்பாக, முறிப்பு, செல்வாநகர், தெண்டமான்நகர், கோணாவில், அறிவியல்நகர் போன்றவை. அங்கே இன்னும் பற்றைகள்தான் வளர்ந்து கொண்டிருக்கு.

நகரத்தின் நடுவே ஒரு பெரிய அகதி முகாம். வவுனியா – யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலுள்ள முகாம்களிலிருந்து மீள் குடியேறுவதற்காக கொண்டு வரப்படுகிறவர்கள், இந்த முகாமில் இறக்கிவிடப்படுகிறார்கள். இந்த முகாம் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இயங்குகிறது. இங்கே வைத்துத்தான் மீள் குடியேற்றத்துக்கான சடங்குகள் நடக்கின்றன. (அதை வேறாக எழுதுகிறேன்). பின்னர், இங்கிருந்து குடியேற்றப்படுகிறார்கள்.

நகரத்தில் கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. கூட்டுறவுக் கடைகள் மட்டும் அத்தியாவசிய நிலையில் இயங்குகின்றன. அவற்றுக்கும் போதிய கட்டுமானங்கள் இல்லை. 'தங்களுடைய சங்கங்களுக்கு வாகனங்களுமில்லை. கட்டிடங்களுமில்லை. இந்த நிலையில் எப்படிச் சங்கங்களை இயக்க முடியும்?' என்று கேட்கிறார்கள் பரந்தன், கிளிநொச்சி கூட்டுறவுச் சங்சங்களின் அதிகாரிகள்.

என்றபோதும் இப்பொழுது கிளிநொச்சி - பரந்தன் கூட்டுறவுச் சங்கங்கள்தான் கொஞ்சம் கூடுதலான பணிகளைச் செய்கின்றன. இந்தச் சங்கங்களுக்கு சிறிய ரக வாகனங்கள் சிலவற்றை வடக்கு மாகாணசபை அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறது.
நகரில் கடைகளைத் திறப்பதற்கு இன்னும் முழுமையாக அனுமதிக்கப்படவில்லை. அதனால் வர்த்தகர்கள் காத்திருக்கிறார்கள். பிரதான வீதிக்கு கிழக்கே எந்தக் கடைகளும் இப்போதைக்குத் திறக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. படையினரின் அனுமதி கிடைத்தால்தான் கடைகளைத் திறக்க முடியும். கடைகளை மட்டுமல்ல, எந்த அலுவலகத்தையும் எந்த நிறுவனத்தையும் அங்கே இயக்க முடியும்.

வீதியின் இரண்டு பக்கங்களிலிமிருந்த கடைகளில் பெரும்பாலானவை இடிக்கப்பட்டு விட்டன. மிஞ்சியிருக்கும் கடைகளுக்கான அனுமதிக்குத்தான் இந்த மாதிரி நடைமுறை.
வீதிக்குக் கிழக்கே இருந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறையின் தலைமைச் செயலக வளாகம் இப்போது பெரிய படைத்தளமாக மாறியிருக்கிறது. அங்கே யாரும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. வீதியில் அந்தப் பிரதேசம் தடைசெய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பெயர்ப்பலகையை மட்டும் பார்க்கலாம்.

இங்கே கட்சி அலுவலகங்களைத் திறப்பதற்கும் கட்டுப்பாடுகளை படையினர் வைத்திருக்கின்றனர். அங்கே தன்னுடைய கட்சிக்கு பழைய இடத்தில் ஒரு அலுவலகத்தைத் திறப்பதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. ஆனந்தசங்கரி கடுமையாக முயன்று கொண்டிருப்பதாகச் சனங்கள் சொன்னார்கள். ஆனால், அதற்கிடையில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக அவர் இரண்டு இடங்களில் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்.

அகதிகள் இன்னும் முழுமையாகச் சொந்த வீடுகளில் போய்க் குந்தவில்லை. அங்கே நிம்மதியாகப் படுத்து ஒரு கண்நித்திரை கொள்ளவில்லை. அதற்குள் தேர்தல் பிரச்சாரங்களுக்காக வந்து விட்டார்கள் என்று சலித்துக் கொண்டார் பொன்னம்பலம் என்ற கிளிநொச்சி வாசியான முதியவர் ஒருவர்.

கிளிநொச்சியில் அரசாங்க அதிபர் பணிமனை, பிரதேச செயலர் அலுவலகம், சில பாடசாலைகள், கல்வித் திணைக்களம், சுகாதாரப் பணிமனை, மருத்துவமனை, நீர்விநியோகப்பிரிவு, கூட்டுறவுச் சங்கங்கள் என்று அரசாங்கத் திணைக்களங்கள் இயங்கத் தொடங்கினாலும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முழு அதிகாரமும் படைத்தரப்புக்கே இருக்கிறது.

மீள் குடியேற்ற நடவடிக்கையில் அதிகமும் சம்மந்தப்பட்டிருப்பது படையினர்தான். அவர்கள்தான் குடியேறிகளை அவர்களுடைய வீடுகளுக்கும் காணிகளுக்கும் அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள்தான் அந்தச் சனங்களுக்குத் தேவையான காரியங்களையும் செய்து கொடுக்கிறார்கள். அவர்கள்தான் அரசாங்கத் திணைக்களங்களின் அதிகாரிகளுக்குக் கட்டளை இடுகிறார்கள். அல்லது சில காரியங்களைச் செய்வதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நகரத்திலும் ஊர்களிலும் வசதியான கட்டிடங்களைப் படையினரே வைத்திருக்கின்றனர். இதில் விடுதலைப் புலிகளின் பணிமனைகளாக இருந்தவை அதிகம். இந்தப் பணிமனைகளில் இப்போது படைத்தளபதிகளின் இருப்பிடங்கள் அல்லது படையணிகளின் கட்டளைப் பீடங்கள், தலைமையகங்கள் இயங்குகின்றன. விடுதலைப்புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்களின் குடும்பங்கள் இருந்த வீடுகளையும் படையினரே வைத்திருக்கின்றனர்.

இந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களை எல்லாம் அரசாங்க உடைமை என்று படையினர் சொல்கின்றனர். ஆனால், இந்த கட்டிடங்களுக்கும் காணிக்கும் உரித்துடையோர் வந்து தகுந்த ஆதாரங்களைக் காட்டும் போது அவர்களிடம் அவை மீள ஒப்படைக்கப்படுகின்றன. ஆனால், அங்கே புலிகளால் அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்களை அகற்றி அவற்றை வேறு ஆட்களுக்குக் கொடுக்கிறார்கள்.
நகரிலிருந்த தமிழீழக் காவல்துறையின் தலைமைப் பணிமனையில் இப்போது ஒரு படைத்துறைச் செயலகம் இயங்குகிறது. ஆனால், அங்கே புதிதாக சிறிலங்கா காவல்துறையின் வன்னிக்கான தலைமையகம் அமைக்கப்படவுள்ளதாக ஒரு பெரிய மாதிரி முன்வரைவுப் படம் வைக்கப்பட்டுள்ளது.

கந்தசாமி கோவிலுக்கு அருகிலிருந்த தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் கட்டிடத்திலும் படையகம்தான். அந்த வளாகம் முட்கம்பி வேலிகளால் அடைக்கப்பட்டிருக்கிறது. புலிகளின் நந்தவனம் என்ற சர்வதேச தொடர்பு மையத்திலும் படையினரே நிலைகொண்டுள்ளனர். அதற்கு அருகில்தான் இப்பொழுது பஸ் நிலையம். தபாற் கந்தோர் புலிகளின் பெரிய புத்தகக் கடையான அறிவு அமுது இயங்கிய இடத்தில் இயங்குகிறது.

அதற்கு முன்னே உடைந்து வீழ்ந்திருக்கும் அந்தப் பிரமாண்டான தண்ணீர்த் தாங்கிக்கு அருகில் வெட்ட வெளியில் சந்தை கூடுகிறது. எல்லாமே வெளியூர்ப் பொருட்கள். முன்னொரு காலம் கிளிநொச்சிக்கு சிங்களப் பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்து பொருட்களை வாங்கிப் போனார்கள். இப்போது வெளியூரிலிருந்தே எல்லாம் வரவேண்டியிருக்கு.

சேரன், பாண்டியன் - சுவையூற்று, இளந்தென்றல், ஏ-1 விடுதி என எவையும் இருந்த சுவடே இல்லை. அதைப்போல கிளிநொச்சி மாவட்டத்தின் பண்பாட்டு மண்டபம், அதற்குப் பக்கத்திலிருந்த புலிகளின் வரலாற்று மையம் இரண்டும் இருந்த இடமே தெரியாத அளவுக்கு அந்தப் பகுதி முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சந்திரன் பூங்காவில், படை நினைவுச் சின்னம் ஒன்று மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

02 மீள் குடியேறிகளில் உதவியோ வசதியோ இல்லாதோருக்கு படையினர் வந்து சிறிய வீடுகளை அமைத்துக் கொடுக்கிறார்கள். ஒரு வீட்டை அமைப்பதற்காக எட்டுப் படையினர் வந்து வேலை செய்வார்கள் என்று பிரதேச வாசிகள் சொல்கிறார்கள். தகரத்தாலான கூரையைக் கொண்ட குடிசைகள். மண்ணாலான சுவர்கள். எல்லாவற்றையும் படையினரே செய்து சீர்ப்படுத்துவார்கள். அதைக் கண்காணிப்பதற்காக சில அதிகாரிகள் சுற்றிக் கொண்டு திரிகிறார்கள்.

கிளிநொச்சியில் இயங்குகின்ற பிரதேச செயலர் பணிமனைக்குச் செல்வதாயின் 57 ஆவது படையணியின் பிரதான தளத்தினூடாகத்தான் செல்ல வேண்டும். 1985 களில் கொஞ்சக் காலம் வடக்குக் கிழக்கிலிருந்த அரச திணைக்களங்கள் படையினரின் தளங்களுக்குள் இயங்கியதையும் அந்தத் திணைக்களங்களின் வாகனங்கள் படைத்தளங்களுக்குள் நிறுத்தப்பட்டிருந்தமையும் இப்போது நினைவுக்கு வரலாம்.
அங்கே இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் இருந்த இடமும் படையினரின் வசமே இருக்கிறது. பாற்பண்ணை, யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம், பட்டுப்பூச்சி வளர்ப்பிடம், இரணமடுவிலிருந்து விவசாய நிலையம், வட்டக்கச்சி விவசாயப் பண்ணை, பனை அபிவிருத்திச் சபை அலுவலகம் ஆகியவற்றிலும் படையினர்தான் நிலைகொண்டிருக்கின்றனர். கிளிநொச்சி மாவட்;ட அழகியல் கலாமன்றத்தில் இன்னொரு படைத்தலைமை அலுவலகம் இயங்குகின்றது.

முன்னரைப்போல ஒரு முகாம் அங்கே இருப்பதில்லை. போரின் விரிவாக்கம் படைத்துறையில் பல பிரிவுகளை உருவாக்கியிருக்கிறது. சிறப்புக் காலாட்படை, ஆட்லறிப்படையணி, புலன்விசாரணைப் படைப்பிரிவு, கொமாண்டோப் படையணி என்று பல அணிகள்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடங்களில் மையங்கொண்டுள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் வௌ;வேறு காரியாலயங்கள். அங்கே அதிகமாக ஓடித்திரிவதெல்லாம் படையினரின் வண்டிகள், வாகனங்கள்தான். சனங்கள் வன்னியில் கைவிட்;ட மோட்டார் சைக்கிள்கள் தொடக்கம் லொறி, பஸ், வான், உழவு இயந்திரம் என எல்லாவற்றையும் படையினர் வைத்திருக்கிறார்கள்.

போர்க்காலத்தில் பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெயில் ஓடித்திரிந்த மோட்டார் சைக்கிள்களை அப்படியே அவர்கள் ஓடுகிறார்கள். மோட்டார் சைக்கிளை ஸ்ரார்ட் பண்ணும்போது சூப்பியில் பெற்றோலைச் சிறிது விடவேண்டும். அப்படியென்றால்தான் அது ஓடும். இப்போது படையினரும் இதே விளையாட்டைத்தான் காட்டுகிறார்கள்.

நாங்கள் கிளிநொச்சி நகரத்தில் நிற்கும்போது சில இராணுவ ட்ரக் வண்டிகள் மூடிக்கட்டியபடி வவுனியாப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தன. அவற்றில் சில கதவுகளும் வேறு சில பொருட்களும் அந்த மறைப்புகளையும் மீறித் தெரிந்தன. 'எல்லாம் எங்கடை சாமான்தான். பாருங்கோ கொண்டு போறாங்கள்' என்று ஒருவர் பெருமூச்சு விட்டபடி சொன்னார்.

இதற்கு முன்னரும் இப்படிப் பல வண்டிகளில் ஏராளம் பொருட்கள் வன்னியிலிருந்து தென்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டன என்று பரவலாகச் சனங்கள் கதைத்திருக்கிறார்கள். தங்களால் கைவிடப்பட்ட பொருட்களெல்லாம் இப்படி வெளியே போய்க் கொண்டிருக்கின்றன என்று சனங்களிடம் ஒரு அபிப்பிராயம் நிலவுகின்றது.
இந்தப் பகுதியில் கடந்த ஜனாதிபதித் தேர்தலையொட்டி முதலாவது மீள்குடியேற்றம் நடந்தது. (தேர்தல்கள் நெருங்கும் போது மீள்குடியேற்றப் பணிகள் மும்முரமடைவது இப்போது ஒரு வழமையாகி விட்டது. அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டியும் அடுத்த கட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன). ஏறக்குறைய இரண்டு மாதங்களாகியிருக்கும் இந்த மீள் குடியேறிகளுக்கான பதிவுகள், கணக்கெடுப்புகள் இன்னும் முடிந்தபாடில்லை.

கொழுத்தும் வெயிலில் மெலிந்து ஒடுங்கிப் போன சனங்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். டிப்போ வீதியில் இரண்டு கைகளுமில்லாத ஒருவரைக் கண்டேன். அவரைக் கண்டு ஒரு அரை மணி நேரத்தில் அதைப்போல இரண்டு கைகளும் இல்லாத இன்னும் ஒருவரை திருநகர் றோட்டில் பார்த்தேன். சற்று நேரத்தில் வேறொரு நடுத்தர வயதுப் பெண். வேறு சிலருக்கு ஒரு கையில்லை. சிலருக்கு ஒரு காலில்லை.
அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கிராமசேவகர் ஒருவரிடம் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வந்து ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார். விசாரித்துப் பார்த்தேன், அந்த இரண்டு பிள்ளைகளின் பெற்றோர் வன்னிப் போரின்போது எறிகணை வீச்சில் கொல்லப்பட்டு விட்டனர். அதில் மூத்த பிள்ளைக்கு பத்து வயதிருக்கலாம். மற்றப் பிள்ளைக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கலாம். நான் அவர்களுடைய பெயரைக் கேட்டேன். மிரண்டு போய்ப் பார்த்தார்கள். எத்தனையோ விசாரணைகளால் அச்சமடைந்திருப்பதுதான் காரணம்.

03 பொதுவாகக் கிளிநொச்சியில் எல்லாமே பாழடைந்து விட்டன. அங்கே வீடுகளில்லை. நல்ல தெருக்களில்லை. கடைகள், சந்தை, பஸ் நிலையம், மக்கள் தங்குவதற்கான விடுதிகள், கோவில்கள், விளையாட்டு மைதானங்கள் என்று எதுவுமே இல்லை. உடைந்தும் சிதைந்துமிருக்கிற சில பாடசாலைகளும் இப்போதுதான் இயங்கத் தொடங்கியிருக்கின்ற மாவட்டச் செயலகமும் மருத்துவமனையும்தான் சேதங்களின் மத்தியிலும் உருப்படியாக மிஞ்சியிருக்கின்றன. 

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைத்தீவீல் அரசியல் வலுவாதிக்கமுள்ள ஒரு நகராக, வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் ராஜதந்திரிகளும் மையங்கொண்டிருந்த நகராக, ஹெலிகொப்ரர்களும் ஊடகவியலாளர்களும் பறந்து திரிந்த ஒரு நகராக கிளிநொச்சி இருந்தது என்றால், அதை இப்போது யாரும் நம்பமாட்டார்கள்.

நகரத்தின் மத்தியில் அப்படியே வீழ்ந்து சிதைந்து போய்க்கிடக்கிறது தண்ணீத்தாங்கி. இது இப்படி வீழ்ந்த இரண்டாவது தாங்கி. முதல் தாங்கி, 1990 களில் சாய்க்கப்பட்டது. பின்னர், அதே இடத்தில் அதே மாதிரியான வடிவத்தில் இன்னொரு புதிய தாங்கி 2004 இல் கட்டப்பட்டது. இப்போது அதுவும் சாய்க்கப்பட்டு விட்டது.

இதுதான் கிளிநொச்சியின் கதையே. எழுவதும் புகழடைவதும் பின்னர் சடுதியாக வீழ்ந்து நொருங்குவதுமாக இருக்கிறது கிளிநொச்சி. அங்குள்ள மக்கள் கஸ்ரப்பட்டு உழைக்கிறார்கள். மிகக் கடினமாக வயல்களில் நின்று பாடுபடுகிறார்கள். அப்படியெல்லாம் கஸ்ரப்பட்டுத் தங்கள் நகரத்தைக் கட்டியெழுப்புகிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காமலேயே அவர்களுடைய நகரம் சடுதியாக நொருங்கிப் போகிறது. பிறகு, மீண்டும் உழைத்துத் தங்கள் நகரத்தைக் கட்டியெழுப்புகிறார்கள். பிறகும் அது நொருக்கப்படுகிறது.

நிலாந்தனின் 'மண்பட்டினங்கள்' கவிதையில் சொல்லப்படுவதைப்போல
”...............இப்போது இந்த மக்கள் மண்ணாலான தங்கள் நகரத்தை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்குகிறார்கள்” இலங்கையிலேயே மிகவும் இளைய இந்தப் பட்டினம்தான் மிக அதிகளவு இழப்புகளைச் சந்தித்தது. இந்தப் பட்டினம்தான் அதனுடைய வயதையும் விட மற்ற எல்லாப் பட்டினங்களையும் பார்க்க மிக முக்கியத்துவத்தையும் பெற்றது. விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் தொடர்பாடல் நகரமாக இது இருந்தது இதற்குக் காரணமாக இருக்கலாம்.

இப்போது ஏ9 வீதி வழியே இந்த அழிவடைந்த நகரைக் கடந்து வாகனங்கள் வடக்குக்கும் தெற்குக்குமாகப் பறந்து கொண்டிருக்கின்றன. பாழடைந்த நகரத்தின் மனிதர்கள் பூச்சிகளைப் போல ஊர்ந்து கொண்டிருக்கின்றனர். மண்ணாலான தங்களின் பட்டினங்களை மீண்டும் இவர்கள் கட்டி எழுப்புவது எப்பொழுது?

சூதான சமாதான காலம் எல்லாவற்றையும் பெரும் புயலாக அடித்துக் கொண்டு போயிற்றா?

 
 
English