.
 
 

ஓர் ஆறுதல் வார்த்தை சொல்ல முடியுமா?
'பொங்கு தமிழ் இணையத்திற்காக – விதுல் சிவராஜா' 31-03-2010

ஆடு, மாடு, நாய், பூனை, கோழி என எந்த வளர்ப்புப் பிராணியும் இல்லாத வீடுகளை நீங்கள் ஒரு தடவை எண்ணிப் பாருங்கள். அதுவும் வன்னியில் அப்படி இருக்கிறது என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். மேற்கு வன்னியில் - பூநகரி, முழங்காவில், ஜெயபுரம், ஆனைவிழுந்தான், ஸ்கந்தபுரம், வலைப்பாடு என்று எந்த இடத்திலும் நீங்கள் ஒரு கோழியைக் காண மாட்டீர்கள். ஒரு ஆடோ, ஒரு மாடோ அங்கே கிடையாது. எங்கேனும் ஒரு நாயை அபூர்வமாக நீங்கள் காணலாம். ஆனால் அந்த நாயும் அங்கே இருக்கும் யாருடையதாகவும் இருக்காது. அநேகமாக அது அங்கே இருக்கும் படையினரின் நாய்தான்.

வானம் நிலத்தோடு முட்டுகின்ற அந்தப் பெரிய வெளிகளில், பனங்கூடல்களின் நடுவே, சிறு பற்றைகள், வாய்க்கால் கரைகளில் எப்போதும் ஆயிரக்கணக்காக மாடுகள் நின்று மேய்ந்தது ஒரு காலம். அங்கே பட்டி பட்டியாக ஆடுகள் நின்றது அந்தக் காலம். ஆட்டு மொச்சை ஐந்து ஆறு மைல் தூரத்துக்கு அடிக்கும். மாடுகள் கூட்டம் கூட்டமாக படுத்திருக்கும்.
ஆனால் இப்பொழுது அந்த வெளிகள் வெறுமையாகி கிடக்கின்றன. காற்று ஊழையிடுகிறது. ஆட்டு மொச்சைக்குப் பதிலாக உவர் மணக்கிறது. எங்கேனும் ஒன்றிரண்டு நிலம் பதுங்கிகள் மட்டும் அங்குமிங்குமாக அலைகின்றன. அவ்வளவுதான்.

மேற்கு வன்னியில் மூன்று மையங்கள் முக்கியமானவை. ஒன்று, பூநகரி. அடுத்தது பனங்காமம். மற்றது மாந்தை.
பூநகரி மிகப் பழைய இராசதானி. அது இலங்கையின் பூர்வ குடிகள் இருந்த ஒரு முக்கிய மையம். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே சனங்கள் இருந்திருக்கிறார்கள். இந்த இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளிலும் அவர்கள் பல போர்களையும் அழிவுகளையும் கண்டார்கள். எல்லா இராசதானிகளையும் போல அங்கும் கண்ணீரும் குருதியும் சிந்தப்பட்டிருக்கிறது.

அதிகம் ஏன், 1985 களில் பூநகரியில் இருக்கும் வாடிவீட்டில் - அதாவது டச்சுக்காரரின் கோட்டையில் இலங்கை ராணுவம் இருந்தபோதும் சனங்கள் இப்படித்தான் இரத்தம் சிந்தினாரர்கள். கண்ணீர் பெருக்கெடுக்கத் தொடங்கியது.

இடப்பெயர்வுகள், அலைச்சல்கள் என்று மாறி மாறி இருந்த போதும் இடையிடையே அவர்கள் மீண்டும் அங்கே குடியேறினார்கள். குறிப்பாக விடுதலைப்புலிகளால் பூநகரிப் படைத்தளம் வெற்றிகொள்ளப்பட்டதற்குப் பிறகு, பூநகரி மீண்டும் துளிர்க்கத் தொடங்கியது.

ஆனால், அது அவ்வளவு சடுதியாக மீண்டும் அழிந்து போகும் என்று யாரும் எண்ணவேயில்லை. இப்படி அங்கே கண்ணீரோடு சனங்கள் மீண்டும் அலைய வேண்டியிருக்கும் என்றும் எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. மீண்டும் இடிபாடுகளும் சிதைவுகளும்தான் மிஞ்சியிருக்கும் என்றும் யாரும் நினைக்கவில்லை. ஓர் ஆண்டுக்குள் எல்லாமே தலை கீழாகி விட்டன.

தரிசு பற்றிய வயல்களில் காய்ந்த புற்களின் மீது அலைகிறது காற்று. அங்கே சனங்களுக்குப் பதிலாக அதிகம் இருப்பது படையினர்தான். ஏராளம் படையினர். வீடுகளுக்குப் பதிலாக படை முகாம்கள். காவலரண்கள். அங்கே ஆடுகள், மாடுகள், நாய்கள், பூனைகள், கோழிகள், குருவிகள், மனிதர்கள் எல்லாமும் இப்போது படையினர்தான். படைமயமாகிவிட்டது எல்லாமே. அங்கே இப்போது பச்சை என்பது படைகளின் பச்சையே.

மொட்டைக்கறுப்பன் நெல்விளைந்த வயல்களில் உழவுக்குப் பதிலாக படை வண்டிகள் ஓடித்திரிகின்றன. ஆலங்கேணியில் ஒரு பெரிய படை முகாம் இருக்கிறது. அதை மிக அழகாகவே வைத்திருக்கிறார்கள். தெருநீளம் இரண்டு பக்கமும் பல அமைப்புகள். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியான பெயர்ப்பலகைகள். அந்த வளாகம் முழுவதுமே துப்புரவாக்கப்பட்டு, தடிகள், பனங்குற்றிகள், மண் அணைகள் போன்றவற்றால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது அந்த முகாம்.
எப்படி உன் கண்ணுக்கு அந்தப் படை முகாம் அழகாகத் தெரிகிறது என்று கேட்கிறீர்களா? இந்தக் கேள்வி என்னுள்ளும் எழுந்ததே. ஆனால், அவர்கள் அதை அப்படித்தான் வைத்திருக்கிறார்கள். யாருடைய கவனத்தையும் ஈர்க்கிற விதமாய். இப்போது படையினருக்கு அதிகம் வேலை இல்லை அல்லவா. அதனால் அவர்கள் தங்கள் முகாம்களை அழகழகாய் வடிவமைப்பதிலேயே கவனஞ் செலுத்துகிறார்கள்.

பின்னேரங்களில் விளையாடுகிறார்கள். காலையும் மாலையும் உடற்பயிற்சி நடக்கிறது. அதை விட்டால் அவர்களுக்கு வேறு என்னதான் வேலை உண்டு? பூநகரியில் விளையாடுவதற்கு ஏராளம் மைதானங்களிருக்கின்றன. எல்லா இடமும் வெட்டையும் வெளியும் என்பதால் எங்கும் விளையாடலாம்.

படையினர் இப்படி இருக்கும் போது அங்கே மீண்டும் வந்திருக்கிற மீள் குடியேறிகள் தங்கள் வளவுகளைத் துப்புரவாக்குகிறார்கள். கூரையில்லாத வீடுகள். வேலியில்லாத வளவுகள். உக்கியும் மக்கியும் போன ஆட்டுக் கொட்டில்கள். வெறுமைகச் சிதைந்து போயிருக்கும் மாட்டுப் பட்டிகள்.

சனங்கள் எல்லாவற்றையும் இனிப் புதிதாக்க வேணும். இப்போது அவர்கள் சின்னச் சின்னக் கொட்டில்களைப் போடுகிறார்கள். சிலர் தறப்பாள் கூடாரங்களை அமைத்து, அதற்குள் இருந்து கொண்டே வளவுகளைச் செம்மையாக்குகிறார்கள். வேலிகளை அடைக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் எந்த உற்சாகமும் இல்லை. ஒட்டி உலர்ந்த முகத்தோடு, ஈரம் வற்றிய கண்களோடு நடைப் பிணங்கள் என்று சொல்வார்களே அதே நிலையில் அவர்கள் சடங்களாக அங்கே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
யார் அவர்களை இப்படித் தொடர்ந்தும் பழிவாங்கிக் கொண்டிருப்பது? எதற்காக அவர்கள் இப்படித் தொடர்ந்தும் அலைக்கழிக்கப்படுகிறார்கள்? ஊருக்குத் திரும்பிய பிறகும் அந்நியர்களைப் போல அவர்கள் இருக்க வேண்டியதன் மர்மம் என்ன? இதன் பகிரங்கம் என்ன? யார் அவர்களை இந்த அலைச்சல்களில் இருந்தும் இந்த முடிவுறாத துயரங்களிலிருந்தும் காப்பாற்றுவது? எப்போது தீரும் இவர்களின் இந்தத் துக்கங்கள்? அதற்கான உத்தரவாதம் என்ன? அதை யார் கொடுப்பது?

தூரத்தூர இருக்கிற வீடுகள். அந்த வீடுகளுக்குச் செல்லும் வயல்வரம்புகளின் மீதான ஒற்றையடிப் பாதைகள். அதில் தண்ணீர்க் கொள்கலன்களோடு செல்கிறார்கள் இரண்டு சிறுவர்கள். அவர்கள் தூக்கிச் செல்ல முடியாத பாரம் அது. அதனால் அந்தக் கொள்கலன்களை அவர்கள் வைத்து வைத்தே தூக்கிச் செல்கிறார்கள்.

முதியவர்கள் சோர்ந்து போய் மரங்களுக்குக் கீழே இருக்கிறார்கள். தங்களால் எல்லாவற்றையும் எப்படி மீண்டும் சீர் செய்ய முடியும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. தங்களின் உழைப்புக்கு, கடந்த கால வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று அவர்கள் சிந்திக்கக் கூடும். அல்லது திரும்பத் திரும்ப எதற்காகத் தாம் தோற்கடிக்கப் படுகிறோம் என்றும் அவர்கள் எண்ணக்கூடும்.

இருக்காதா பின்னே, அவர்கள் எத்தனை தடவைகள் தங்களின் சொந்த வீட்டிலிருந்தும் சொந்த ஊரிலிருந்தும் விரட்டப்பட்டிருக்கிறார்கள். இன்னும் அவர்களுடைய கண்ணுக்கு முன்னே படையினர் நிற்கும் போது அவர்களால் எதைத்தான் உத்தரவாதப்படுத்த இயலும்?

எல்லாவற்றையும் இழந்து நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் தாங்கள் இப்போதிருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள். தங்களுடைய சொந்த ஊருக்கு வந்திருக்கிறோம் என்பதைத் தவிர, அவர்கள் மகிழ்வதற்கு எந்த அடிப்படைகளுமில்லை.
அவர்களுடைய பிள்ளைகள் படிப்பதற்கேற்ற வகையில் பள்ளிகளில்லை. பள்ளிகளில் படிப்பிக்க வருகின்ற ஆசிரியர்கள் தங்குவதற்கு விடுதிகளில்லை. அயலில் வீடுகளுமில்லை. ஊரவர்களே தறப்பாள் கூடாரங்களுக்குள் தங்களை வைத்துக் கொள்ள முடியாமல் திணறும்போது விருந்தினர்களை எப்படி அதற்குள் வைத்துக் கொள்வது?

ஆசிரியர்கள் நேரத்துடன் வருவதற்கு வசதிகளுமில்லை. காலையில் பத்துப் பதினொரு மணிக்குத்தான் அநேகமான பாடசாலைகள் தொடங்குகின்றன. பின்னர் ஒரு மணிக்கோ ஒன்றரை மணிக்கோ அவை திரும்பவும் மூடப்படுகின்றன. இதைத் தவிர இப்பொழுது அங்கே வேறு வழிகளில்லை.
சனங்களின் இப்போதைய பிரதான தொழில் அங்கே என்ன தெரியுமா? பதிவுகள் செய்வதுதான். எல்லாவற்றுக்கும் பதிவுகள். தங்கள் வீட்டில் குடியிருப்பதற்கான அனுமதிக்காகப் பதிதல். தொழில் செய்வதற்காகப் பதிதல். இழந்த போக உடமைகளுக்காகப் பதிதல். சில உதவிக் கொடுப்பனவுகளுக்காகப் பதிதல்... இப்படி ஏராளம் பதிவுகள்.

தங்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அனலடிக்கிற பங்குனி மாத வெயிலில் சனங்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கங்கே சிறு கடைகள் முளைக்கின்றன. செம்மண் புழுதியைக் கிளப்பிக் கொண்டு பஸ்கள் மட்டும் தாராளமாக ஓடுகின்றன. இந்த பஸ்களில் தங்களுடைய துயர முடிச்சுகளோடு சனங்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கிறார்கள்.

அவர்களைப் பிடித்திருக்கிற ஆயிரமாயிரம் துயரங்களிலே மிகக் கொடுமையானது அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பலர் அங்கும் இங்குமாகப் பிரிந்துபோயிருப்பதுவே. அதிலும் அகதி முகாம்களில் சிலர். போராளிகள் என்ற பெயரில் அரசாங்கத்தினால் தடுக்கப்பட்டிருப்போர் சிலர். எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமலே இருப்போர் சிலர் என்று உறவினரைப் பிரிந்திருக்கும் நிலைதான் இந்தச் சனங்களை அதிகம் ஆட்டிப்படைக்கிறது.

சொந்தங்களைத் தேடித் தேடி இவர்கள் அலைந்து கொண்டேயிருக்கிறார்கள். அதற்காகவே - இப்படிச் சொந்தங்களைத் தேடுகிறவர்களை ஏற்றிச் செல்வதற்காகவே - பஸ்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன போல. சனி, ஞாயிறு நாட்களில் தடுப்பிலிருக்கும் தங்களின் உறவினர்களைப் பார்ப்பதற்காகவும் அவர்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்காகவும் ஏராளமானவர்கள் பஸ் ஏறிப் போகிறார்கள்.
அவர்கள் இப்படி தங்கள் சொந்தங்களைத் தேடுவதற்குக் கூட அவர்களிடம் கையில் காசில்லை. உழைப்பில்லாமல், வருமானமில்லாமல் இரண்டாண்டுகளுக்கும் மேலாக இருக்கும் போது அவர்களிடம் எப்படிப் பணமிருக்கும்? இதற்காக அவர்கள் கடன் கேட்டு அலைகிறார்கள். கடன் கொடுப்பதற்கும் எல்லோரிடமும் அங்கே வசதி கிடையாது. அங்கே எல்லோரும் அகதிகள் என்பதால் எவரிடமும் கையில எதுவும் இருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு மட்டும் வெளி உதவிகள் உண்டு. அவர்கள்தான் முடிந்தளவுக்கு உதவுகிறார்கள்.

இந்த உலகத்திலிருந்து எல்லாவற்றாலும் துண்டிக்கப்பட்டிருக்கும் இந்தச் சனங்கள் உண்மையில் எதற்காகவோ தண்டிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அது எதற்காக என்று திரும்பத் திரும்பக் கேள்வியாக எழுகிறது.

பழைய, புகழுக்குரிய இராசதானியாகவும் எப்போதும் மறக்க முடியாத ருசியை நம் நாக்கில் ஏற்றி வைத்திருக்கும் மொட்டைக் கறுப்பன் அரிசிக்குப் பெயர்போனதுமான பூநகரி இன்று இப்படித்தான் இருக்கிறது.

பூநகரி மகா வித்தியாலயம், பழைய டச்சுக் கோட்டைக்கு முன்னாலுள்ள வெளிகளில் எல்லாம் படையினர் இன்னும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். படைப் பெண்கள் அல்லது பெண் படையினர் அங்குள் சிறிய கடைகளில் ஏதோ தங்களுக்குரிய பொருட்களை வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்.
பின்னேரச் சூரியன் அந்த முடிவுறாத வெளிகளில் தன்னை எழுதிச் செல்கிறான், இதுதான் இப்போதைய யதார்த்தம் என்று. இதை விடவும் இன்னொரு யதார்த்தம் இன்னும் ஒரு காலம் வருமென்றும் அவன் ரகசியமாகச் சொல்லிச் செல்கிறான்.
நான் யோசித்தேன் அந்த வெளிகளில் எப்பொழுது ஒரு மாட்டைக் காண்பேன் என்று. அந்தப் பட்டிகளில் எப்போது ஆடுகளின் மொச்சை மணக்கும் என்று.

அதற்குமுதல் இப்படிச் சொந்தங்களைத் தேடி அலையும் சனங்கள் பரபரப்போடும் துக்கத்தோடும் பஸ்களில் பயணிக்கும் நிலை மாற வேணும். அது எப்பொழுது மாறும் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா? யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து அவர்களுக்கு அதைச் சொல்லுங்கள். அல்லது அதற்காக என்ன செய்ய வேண்டும் என்றாவது சொல்லுங்கள்.

ஆடு, மாடு, நாய், பூனை, கோழி எல்லாவற்றுக்கும் முதல் இந்தச் சனங்களுக்குத் தேவை, அவர்களுடைய பிரிந்திருக்கும் உறவுகள்தான். அவர்கள் வந்து விட்டால் மற்ற எல்லாமே மெல்ல மெல்ல வந்து விடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை சரியானதே

 
 
English