ஆழிப்பேரலையின் ஊழித்தாண்டவத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிலக்கணக்கான மக்களின் பத்தாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.
பத்திரிகைச் செய்தி
28.12.2014

தமிழர் புனாழ்வாழ்வுக் கழகம் பிரான்ஸ், பாரிஸ் 18, நகரசபை இணைந்து நடாத்திய ஆழிப்பேரலையின் ஊழித்தாண்டவத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிலக்கணக்கான மக்களின் பத்தாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 28.12.2014 ஞாயிறு மாலை 04 மணிக்கு இளையோர் விவகாரங்களுக்கான 20 RUE PAJOL பாரிஸ் 75018 மண்டபத்தில் நடைபெற்றது.

தாயக விடுதலைக்காக தமது இனிய உயிரை அற்பணித்த மாவீரர்களையும், போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும், மற்றும் அண்மையில் மண்சரிவினால் கொல்லப்பட்ட மலையக மக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

பிரதான பொதுச்சுடரினை ரான்சி நகரமன்ற உறுப்பினரும், உலகத் தமிழர் பண்பாட்டியக்க பிரான்ஸ் தலைவருமான திரு. அலன் ஆனந்தன் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகள், தமிழ்ச்சங்க பிரதிநிதிகள், தமிழர் புனாழ்வாழ்வுக்கழகப் பிரதிநிதிகள், கலைஞர்கள், சமூகஆர்வலர்கள் மற்றும் வருகைதந்த மக்கள் அனைவரும் விளக்கேற்றி, மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.

நடனஆசிரியர் திரு.அருள்மோகன் அவர்களின் மாணவிகள் நினைவு வணக்க நடனங்களையும், கனி அவர்களின் நெறியாள்கையில் இளயோர் பிரெஞ்சு மொழியில் நாடகத்தினையும், பரா அவர்களின் நெறியாள்கையில் திருமதி. கவிராயசிங்கம் அவர்கள் தனிநடிப்பு நினைவலைகளையும், (சுனாமி அழிவும், சொந்த மண்ணைவிட்டு புலம் பெயர்தலும், ஏமாற்றப்படலும் - நெஞ்சம் மறக்கா வலிகள் ஓரங்க நாடகத்தையும்) திரு. சுதர்சன் அவர்கள் அன்றும் இன்னும் சுனாமி வலிகளை நினைவு கூந்து கவி பாடினார்.

நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதி திரு. மைந்தன், பிரெஞ்சு மொழியில் சுனாமி அழிவின் பின் பிரான்சில் இருந்து முன்னெடுக்கப்பட்ட வேலைகள் பற்றியும், மனித நேயத்துடன் உதவிய நகரசபைகளையும் நினைவுகூர்ந்தார். ஐ..ரி வியின் தொழில்நுட்ப உதவியுடன் அன்றைய நிகழ்வுகளையும், எமது மக்களுக்கான ஆறுதல் ஆற்றுகையும் மீள் பார்வையாக குறுந்திரையில் திரையிடப்பட்டது.

அன்று போல் என்றும் தாயக மக்களுக்கு உதவோம் என்ற வைராக்கியத்துடன், நிகழ்வு 7.30 மணிக்கு நிறைவு பெற்றது.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்