தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
84 ,rue philippe de Girad,
75018 Paris, France.
Tél: 01 40 38 30 74
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

அன்பிற்குரிய பிரான்சுவாழ் தமிழ் மக்களே!

கனவுகளே எங்களை இயங்கவைக்கின்றது!

ஐரோப்பிய வாழ்க்கையின் நாளாந்த ஓட்டத்தினுள் எங்களைத் தொலைத்து–வாழ்வின் இன்ப துன்பங்களை ஆறஅமர அனுபவிக்கும் பாக்கியம் தொலைத்த தலைமுறைகளான’ நாங்கள் ஒரு நாட்பொழுதையாயினும் தலைமுறைகடந்தும் - வேற்றுமைகள் கடந்தும் கூடியிருக்கும் சுகத்தினை பகிர்ந்திடல்  வேண்டும் என்கின்ற எண்ணத்தில் உருவாக்கிய தமிழர் விளையாட்டுவிழாவின் 17வது நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரையும் கரம்பற்றி அன்புபகிர்கின்றோம்.

1980களில் விதையாகவிழுந்து 1990களில் முளைவிட்டு எழுந்த புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும் - மகிழ்வுக்குமாக வடிவமைக்கப்பட்ட இந்தநிகழ்வு தலைமுறை இடைவெளிகளைக் கடக்கும் ஒரு சமூகப்பண்பாட்டு பாலமாகவே எம்மால் கட்டியெழுப்பப்பட்டது. பல்லாயிரம் தமிழர்கள் ஒருதிடலில் நாட்பொழுதை பகிர்ந்துகொள்ளும்போதும் ஏற்படும் உணர்வுபிரவாகம் புலப்பெயர்வு தந்த தனிமைவலியை ஆற்றுகைப்படுத்தும் அருமருந்தாக எமது சமூகத்திற்கு அமைந்ததை காலஓட்டத்தில் எம்மால் உணரமுடிந்தது.  தாய்மண்ணை தினமும் மனக்கண்ணில் காணும் தலைமுறைகளும் - அந்தமண்ணையே அறியாது பிறந்த தலைமுறையும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளகிடைத்தவாய்ப்பே இது எனப்பலரும் பாராட்டி ஊக்கப்படுத்தியநிகழ்வு இது. மறுபுறம், இதுவொரு சமூகநிகழ்வாகவும் - பண்பாட்டுநிகழ்வாகவும் பிரமாண்டம் கண்டபோது இந்நிகழ்வின் வீரியத்தினை விரும்பாத எதிர்மறைசக்திகள் இந்த நிகழ்விற்கு உதவிய பல தரப்புகளையும் அணுகி நிகழ்வினை தடுத்திடமுனைந்தபோதும் நிகழ்வின் நீதி நிகழ்வினை இன்றுவரை பாதுகாத்துவருகின்றது. 

இன்று இந்நிகழ்வு பிரான்சின் பிரமாண்டமானதொரு திடலில் பல்வேறு நகரசபைகளினதும், அரசுசார்பற்றநிறுவனங்களினதும் உதவியுடன் நிகழும் வருடாந்த நிகழ்வாகிவிட்டது. இது எமது பிரான்சுவாழ் தமிழ்சமூகத்திற்குக் கிடைத்தவாய்ப்பும் - வலுவும் ஆகும் என்றே நாங்கள் நம்புன்றோம்.

இந்த நிகழ்வினை ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் தமிழ்புனர்வாழ்வுக்கழகம் இன்று எதிர்கொள்ளும் பலவித சவால்களுக்கும் முகம்கொடுத்தவாறு இந்த நிகழ்வில் கலந்து நிற்கின்றது.  இன்று எமது சமூகத்திற்கு ஏற்பட்ட வார்த்தைகளில் வடிக்கமுடியாத துயரத்தையும் - ஏதிலி நிலையையும் எதிர்கொள்வதற்கான ஒரேவழி தமிழர்களாக நாம் அனைவரும் ஒன்றுபட்டுநிற்பதே என்பதை உணர்வுபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் நம்பும் நாம் தமிழர் விளையாட்டுவிழாவினை இதற்கானவொரு தளமாகவே பார்கின்றோம்.   இந்ததத்தளத்தில் ஏற்படும் செயற்பாட்டுரீதியானபகிர்வானது வேறுபாடுகளைக் கடந்து நடந்துவந்த பாதையையும் - அதில் இழந்தவற்றையும் திரும்பிப்பார்த்து–வரலாற்றிருந்து கற்று நாளைய வாழ்வை கூட்டாக அமைப்பதற்கு உதவும் என்று நம்பியே நாங்கள் வாசல்களை திறந்துவைத்துள்ளோம்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பிரதான கரிசனை ஈழத்தமிழர் தாயகமும் அங்கு வாழ்வாதரங்களினை இழந்துநிற்கும் மக்களுமே. சர்வதேச மதிப்பீட்டில் 100 000க்கு மேற்பட்டமக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் வாழ்கின்றனர். பல இலட்சம் குடும்பங்களில் பெண்களே பிரதான உழைப்பாளராக இருக்கின்றார்கள். சிறுவர்களின் கல்வி, ஆரோக்கியம் என்பன மிகுந்த சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. போரினால் ஊனமுற்ற எமது உறவுகள் எதிர்கொள்ளும் நாளாந்த வேதனை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. சிறீலங்கா இராணுவ சிறைக்கூடங்களிலிருந்து விடுவிக்கப்படும் போராளிகளின் வாழ்வுக்கு வகையேதுமற்றநிலைமை நீடிக்கின்றது.  இந்தப் பின்னணியில் எமது பணியின் முக்கியத்தினை புரிந்துகொள்வது சுலபமானது. இந்தச்சவாலை எதிர்கொள்ளக் கூடியஆற்றல், மிக்கப்பலமான புலம்பெயர்ந்த தமிழ்சமூகமும் கரிசனையுடன் உண்டு.

ஆயினும், பணியினை நிறுவனரீதியாக முன்னெடுக்கமுடியாத நெருக்கடியில் நாங்கள் நிற்கின்றோம். அதற்கான முதற்காரணம் சிறீலங்கா அரசு ஏற்படுத்தியுள்ள தடை. ஐநா நிறுவனங்களே பணியாற்றமுடியாதவொரு நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ள சிறீலங்காஅரசு தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நேரடியான நிறுவனமயப்பட்ட பணிகளை ஏற்றுகொள்ளமறுப்பதுடன் தொடர்ந்தும் பயங்கரவாதப்பட்டியில்கள் என்ற ஆயுதத்தினை சர்வதேசரீதியாக எமக்கு எதிராகப் பயன்படுத்திவருகின்றது. காலத்திற்குக் காலம் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சு எமது மனிதநேயக்கரிசனைகளை அரசியல் காழ்ப்புணர்வுடன் விமர்சித்துவருகின்றது. மறுபுறம், தமிழ்சமூகம் 2009ற்குப் பிற்பாடு எதிர்கொள்ளும் அகப்புறநிலவரங்கள் பிறிதொருசவாலாக அமைகின்றது. எடுத்த பணியினை முடிப்பதற்கான வியூகங்களை வகுப்பதற்கும், அமுல்படுத்துவதற்கும் தேவையானவாய்ப்புக்கள் பல இந்த முரண்நிலைகளால் வீணாகிப்போய்விட்டது என்கின்ற வேதனையையும் பதிவு செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது.

இன்று நாம் இரு தளங்களில் எமது பணிகளை புரிந்து வருகின்றோம். தமிழ்சமூகம் பிரசவித்தவொரு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனத்தினை தொடர்ந்தும் இயங்கவைப்பதன் ஊடாக அது உள்வாங்கிய ஞானத்தினையும், தொடர்புகளையும் தக்கவைத்து வருகின்றோம். இது மக்களிடம் வெளிப்படையானதொரு நிறுவனமாகவும், வரலாற்று உண்மைகளையும் - பாடங்களையும் புரிந்து தகுந்தவடிவில் மனிதநேயப்பணிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்கின்ற புரிதலை நிறுவனம் தக்கவைத்துவருகின்றது. இன்று வேர்விட்டுஎழும் புதிய இளைய தலைமுறைகளுடன் இயன்றளவு மனிதநேயத்தளத்திலான உறவுகளைபேணுவதன் ஊடாக சமூகத்தின் மனிதநேயப்பணிகளுக்கான கூட்டுப்பொறுப்பினை வலியுறுத்திவருகின்றோம்.

மறுதளத்தில், இயன்றளவு மனிதநேய உதவிகள் குறிப்பிட்ட சிலதரப்புக்களுக்காவது சென்றடைய வழிகளை திறந்துவைத்துள்ளோம். தனிப்பட்டவழிகளின் ஊடான உதவிகள் என்கின்ற சாத்தியமானவழியினை பயன்படுத்தி எம்மிடம் உள்ள சிறிதளவு வழங்கல்களை பகிர்ந்துவருகின்றோம்.

நாங்கள் தமிழ்சமூகத்தின் மனிதநேய சிந்தனைகளையும், விழிப்பினையும் ஊக்கப்படுத்தி நாளை வாய்ப்புக்கள் கிடைக்கும் போது நிறுவனமயப்பட்ட உதவிகளை பாதிக்கப்பட்ட – தேவைப்படும் மக்களுக்குவழங்குவோம் என்கின்ற பெரும் கனவினைக் கொண்டுள்ளோம். அதுவே எம்மை ஓயவிடாதுவிரட்டுகின்றது - இயங்கவைக்கின்றது!.

நன்றி
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்