தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
26,rue du Département,
75018 Paris,
France.
Tél: 01 40 38 30 74
Fax: 01 53 26 09 77
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

தமிழர் புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் பணிப்பாளர் செ.சுந்தரவேல் அவர்கள் 28.02.2010 சலங்கை நிகழ்வில் ஆற்றிய உரை
01-03-2010 தமிழர் புனர்வாழ்வுக் கழகம் -பிரான்ஸ்

1989ல் பிரான்சு வாழ் தமிழ் சமூகத்தினுள் இயங்கிய மனிதநேயம் கொண்ட சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட முன்முயற்சியின் பயனாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்சு முளைகொண்டது

பிரான்சு சட்டஅமைவுகளின் கீழ் பதிவுபெற்ற - மனிதநேய குறிக்கோள்களைக் கொண்ட நிறுவனமாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் அன்று உருவாக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தினைத் திரும்பிப் பார்க்கின்ற போது தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அரசியல் மற்றும் மனிதஉரிமைகள் பரப்புரையினை முன்னெடுக்கும் முன்னணி நிறுவனமாக திகழ்ந்தமையும், தமிழர் கலைபண்பாட்டுக்கழகம், தமிழ்பெண்கள் அமைப்பு என்பன சமூகநோக்குடன் தத்தமது தனித்துவமான பணிகளை முன்னெடுக்கும் நிறுவனங்களாகவும் திகழ்ந்தமையும் மனக்கண் முன் தெரிகின்றது.

இந்தச்சமூக சூழலில், ஈழத்தமிழர் தாயகப்பகுதிகளில் போரினால் பாதிப்புற்ற மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதும், குறுங்கால புனர்வாழ்வுப் பணிகளுக்கு உதவுவதுமே எமது பிரதான இயங்குபுள்ளியாக வடிவம் கொண்டது.

பிரான்சு வாழ்; ஈழத்தமிழ் மக்களின் தாயகப் பிரதேசமான இலங்கைத் தீவின் வடக்குகிழக்குப் பகுதியெங்கும் அன்றைய காலகட்டத்திலேயே வியாபித்துச் செயற்பட்ட முதன்மை நிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக்கழகத்துடன் இணைந்து உடனடி நிவாரணப் பணிகள், குறுங்கால - மத்தியகால புனர்வாழ்வுப்பணிகள் எனப்பலவகை மனிதநேயத்திட்டங்கள் எமது தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்சு முன்னெடுத்தது. போரினால் தொடர்ந்து இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கான இலைக்கஞ்சித் திட்டம் தொடக்கம் சிறுவர் பராமரிப்புத்திட்டங்கள், பெண்கள் மேம்பாட்டுத்திட்டங்கள், வயோதிபர் இல்லங்கள், சத்துணவுத்திட்டங்கள், வலுக்குறைந்தவர்களுக்கான திட்டங்கள், மாதிரிக்கிராமங்களை உருவாக்குதல், கல்வித்திட்டங்கள் எனப்பல திட்டங்களுக்கான ஆதரவினை எங்கள் அமைப்பு கடந்த இருபது வருடங்களாக வழங்கிவருகின்றது.

இத்தகைய செயற்பாடுகளுக்கு பிரான்சு வாழ் தமிழ் மக்கள் வழங்கிய நிதி ஆதாரங்களை நேரடிப் பங்களிப்புக்களாக, உண்டியல் திட்டங்களாக, சிறப்பு கலைநிகழ்வுகள் ஊடாக, விளையாட்டு விழாக்கள் மூலமாக எனப்பல வழிகளில் பெற்று தாயகத்தில் துன்புற்ற மக்களின் துயர்துடைக்க வழங்கி வந்தோம்.

மறுபுறம், போரின் விளைவுகள் - பாதிப்புறும் மக்களின் அவலநிலை - நிவாரணப்பணிகள் என்பன தொடர்பான விளக்கங்களை பிரான்சு அரசு, அரசுசார்பற்ற நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் என்பனவற்றிற்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தி வந்தோம். பிரான்சு வெளிவிவகார அமைச்சின் மனிதநேய பணிகளுக்கான பிரிவு தொடக்கம் பிரான்சு பாரளுமன்ற மனிதநேய விவகாரங்களுக்கான குழுக்கள் வரை பலதரப்பட்ட அரசு பீடங்களை தொடர்ந்து அணுகி வந்தோம்.

சுனாமி எனப்பட்;ட ஆழிப்பேரலை அவலம் இடம்பெற்ற போது எமது பணி மிகவீரியம் பெற்று பிரான்சு தமிழ்சமூகத்தின் அனைத்துத் தரப்பின் துடிப்பினையும் உள்வாங்கி செயற்பட்டது. நிதி ஆதாரங்கள் தொடக்கம் மனிதவள ஆதாரங்கள் வரை திரட்டப்பட்டு தாயகத்திற்கு அனுப்பப்பட்டது. பிரான்சு பாரளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு தாயகத்திற்கு எம்மால் அனுப்பிவைக்கப்பட்டது.

இறுதியாக போர் மூர்க்கம்பெற்ற போது சுமார் ஒருவருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு எம்மால் இயன்ற உதவிகளை வழங்கி வந்ததுடன் மனிதநேய உதவிகளை சுமந்து தாயகத்திற்கு அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலிற்கும் எம்மால் பெரியளவிலான உதவி வழங்கப்பட்டது.

அன்று தொடங்கிய எமது பயணம் பல்வேறுபட்ட மாறுபட்ட சூழல்கள் ஊடாக விரிவுபெற்று இன்று புதியதொரு காலகட்டத்திற்குள் நுழைகின்றது.

இன்று ஓப்பீட்டளவில் போர்ஓய்ந்த சூழல். ஆனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வாடுகின்றனர். வன்னிப்பகுதிகளில் கட்டமைக்கப்பட்டிருந்த பலவித நிவாரண மற்றும் உதவிவழங்கும் பொறிமுறைகள் உடைவுபெற்று சிறீலங்கா அரசும், மட்டுப்படுத்தப்பட்டளவிலான அரசு சார்பில்லா நிறுவனங்களினதும் பொறுப்பில் எமது மக்கள் விடப்பட்டுள்ளனர். மறுபுறம், எமது பிரதானமான பணிகளை முன்னெடுத்த நிறுவனமான இலங்கை தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினை தடைசெய்துள்ள சிறீலங்கா அரசு அதனது செயற்பாட்டாளர்களை கைதுசெய்து தடுப்புமுகாம்களில் வைத்துள்ளது. ஈழத்தமிழர் தாயகத்தில் வாழும் பாதிக்கப்பட்ட அனைத்துத்தரப்பு மக்களுக்கும் உதவுவதற்கான பிரான்சு வாழ் தமிழ் சமூகத்தின் உரிமைகளும் தடுக்கப்படுகின்றது.

இந்தப் புதிய சூழலை எவ்வாறு நாங்கள் எதிர்கொள்ளப் போகின்றோம்?.

இதுபற்றிய விரிவான கலந்துரையாடல்கள் எம்மத்தியில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவருகின்றது. பிற நாடுகளில் செயற்படும் தமிழர் மனிதநேய நிறுவனங்களுடனும் இதுபற்றிய விரிவான ஆய்வுகளை நடத்தினோம்.

நாங்கள் எமது எல்லைகளாக சில நிலைப்பாடுகளை முன்வைத்தே ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தோம்.

  1. பிரான்சு வாழ் தமிழ்சமூகத்தின் மனிதாபிமான - மனிதநேய செயற்பாடுகளுக்கான அனைத்து நோக்குக்களையும் உள்ளடக்கியதொரு விரிவான அமைப்பாக தொடர்ந்தும் செயற்படல்.
  2. எமது மக்கள் இங்கு வழங்கும் உதவிகளை எதுவித சட்ட மற்றும் பிறவழி நெருக்கடிகளுக்கும் உட்படுத்தாது பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்குப் பயன்படுத்தல்.
  3. சிறீலங்கா அரசுடன் நேரடியாகவும், பிரான்சு அரசு. அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொதுசன அமைப்புக்கள் என்பன ஊடாகவும் ஈழத்தமிழர் தாயகத்தில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்ட தொண்டுநிறுவனப்பணியாளர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு தொடர்ந்து வேண்டிச் செயற்படல்.
  4. பிரான்சு அரசு மட்டத்திலும், அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் மத்தியில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பான தகவல்களை வழங்குதல்.
  5. சர்வதேசரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் சென்றடைகின்றனவா என்பதை கண்காணித்து தொடர்புபட்ட அரசுகளுக்கும், நிறுவனங்களுக்கும் தகவல்களை விநியோகித்தல்.
  6. பிரான்சு வாழ்; தமிழ் சமூகத்தினுள், குறிப்பாக இளைய தலைமுறை மத்தியில் பாதிப்புற்ற மக்கள் பற்றிய விழிப்பினை ஏற்படுத்துவதற்கும், அவர்களை மனிதாபிமானக் கோணத்தில் செயற்படத்துண்டுவதற்கும் முற்படல்.
  7. பிரான்சு வாழ் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் பிரத்தியேகமான மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கு உதவும் திட்டங்களை வகுத்தல். குறிப்பாக, முதியோர், புதிதாக பிரான்சிற்கு வந்தோர், பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் போன்றோரிற்கான ஆலோசனைகள், வசதிகளை வழங்குவதற்கான திட்டங்களை வகுத்தல்.

மேற்கூறப்பட்ட எல்லைகளுக்குள் நாங்கள் எவ்வாறு செயற்படப்போகின்றோம்?.

முதலில் இதற்கான மனிதவளங்களை திரட்டுதல் மற்றும் நிதி ஆதாரங்களை இனங்காணல். அடுத்து திட்டங்களை சரியாக வகுத்தல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்கல் என்கின்ற மூன்று அடுக்குகளாக விடயத்தினை நாங்கள் அணுகுகின்றோம்.

சுமார் இருபது வருடப் பணிகள் ஊடாக தகுந்த பொதுசன தொடர்புகள் கொண்ட மனிதவளம் எமது நிறுவனத்திடம் உள்ளது. சுனாமிப் பேரலைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்த இளைய தலைமுறை எமக்கு கூடுதல் வலுவினைத் தந்துள்ளது. இதே இருபது வருட செயற்பாடுகள் ஊடாக எமது திட்டங்களுக்கான நிதி ஆதாரங்களை நாங்கள் இனங்கண்டு பெற்று வருகின்றோம்.

வருடம்பூராவும் எமது தொண்டர்கள் உண்டியல்கள் ஊடாக நிதி ஆதாரங்களைப் பெற்று சேகரித்து வந்தனர். சிறுதுளி பெருவெள்ளமாக அது பயன்தந்தது.

சலங்கை, தமிழர் விளையாட்டு விழா போன்ற நிகழ்வுகளின் ஊடாக நிதி திரட்டப்பட்டது. பல்வேறு பிரதேச தமிழ்சங்கங்களும், நிறுவனங்களும் காலந்தோறும் திட்டங்களுக்கான உதவிகளைத் தந்துள்ளனர்.

இவற்றினைத் தவிர வணிகர்களும் செல்வந்தர்களும் மனமுவந்து பல்வேறு திட்டங்களுக்கு உதவி வருகின்றனர்

இந்த உதவிகள் மூலம் பெறப்படும் நிதி ஆதாரத்தினை சிந்தாமல் சிதறாமல் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொடுப்பதே முதன்மையான பணியாக நாங்கள் கருதுகின்றோம். இதற்கு தாயகத்தில் செயற்படும் பலவித தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றோம். பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கல்வி, உணவு, இருப்பிட வசதிகளை ஏற்படுத்தல் முதன்மை நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏதிலிகளாக்கப்பட்ட சிறுவர்களைப் பராமரித்தல், பெண்கள்-வயோதிபர்களைப் பராமரித்தல், வலுக்குறைந்த தரப்பினர்களுக்கு உதவுதல் என்பன முடிவுகளை எடுப்பதற்கான முக்கிய விடயங்களாக அமையவுள்ளன.

இந்த உதவிகளை உள்ளுர் தொண்டுநிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளும்போது அந்த உதவிகள் குறித்த மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கான பொறிமுறையொன்றை அமைப்பது முக்கியமானதாகவுள்ளது. இதற்கு தகுந்த அனுபவம் மிக்க சமூகஆர்வலர்களை மாவட்டங்கள் தோறும் நியமித்தல் எனும் எண்ணக்கரு எம்மிடம் உள்ளது.

இந்தச் செயற்திட்டங்கள் அனைத்தும் பகிரங்கமானமாகவும், நிதி உதவிகளை வழங்கியவர்கள் தாங்கள் வழங்கிய நிதி பயன்பட்ட விதத்தினை அறிவதற்கான வாய்ப்புக்களை கொண்டதாகவும் இருக்கும்.

மறுபுறம், பிரான்சு அரசு மற்றும் சமூகம் மத்தியில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பான களத்திலிருந்து பெறப்பட்ட அறிக்கைகள், ஆவணங்களை வழங்குவதும், உதவுமாறு கோருவதும் தொடர்ந்து இடம்பெறவுள்ள திட்டங்களாகும்.

நாங்கள் கடந்த காலங்களில் மனிதாபிமானப்பணிகளில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்படப்டு சிறையிடப்பட்டுள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழக தொண்டர்கள் மற்றும் பிற தொண்டுநிறுவன தொண்டர்களின் விடுதலைக்கு உழைப்பதற்கான சிறப்புக்குழுவொன்றினை விரைவில் அமைக்கவுள்ளோம். அது பரந்துபட்டளவில் செயற்பட்டு இந்த விடயம் தொடர்பான கவனஈர்ப்பினை மேற்கொள்ளும். சிறீலங்கா அரசுவுடனும், பிரான்சு அரசுவுடனும் இந்தக் குழு முன்னுரிமை தரப்பட்ட தொடர்பாடல்களை மேற்கொள்ளும்.

பிரான்சு மட்டத்தில் மனிதாபிமானச் செயற்பாடுகளுக்காக, குறிப்பாக முதியோர் - பெண்கள் - நோய்வாய்ப்பட்டவர்கள் தொடர்பான ஆதரவுப் பணிக்கான ஆய்வுப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். 2010 இறுதிக் காலகட்டத்திற்குள் இது தொடர்பான பணிகளுக்கான உபநிறுவனமொன்றினை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம்.

மனிதாபிமானத் தேவைகள் தொடர்பான தமிழ் சமூகத்தினிடையேயான கருத்துப்பகிர்வு கருத்தரங்குககளை மாதந்தோறும் பிரான்சில் தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் நடத்துவதற்கும், வெளியீடுகளைக் வெளியிடவும் முடிவுகளை மேற்கொள்ளவுள்ளோம்.

மேற்கூறப்பட்ட பணிகள் தொடர்பாக பணியாற்ற பிரான்சு சமூகத்தின் அனைத்துத்தரப்பிடமிருந்தும் ஆலோசனைகளையும், பங்குபற்றுதல்களையும் பிரான்சு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் எதிர்பார்க்கின்றது.

பிரான்சு தமிழ் சமூகத்தின் மனிதாபிமான - மனிதநேய முகமாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் செயற்படும் என்கின்ற உறுதிமொழியினை வழங்குகின்றோம்.

தற்போது இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துள்ளது. அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தம்மை தயார்படுத்தும் வேலைகளில் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ளது. இதுவொன்றும் புதினமான விடையம் அல்ல ஆனால் எமது மக்களின் அன்றாடப்பிரட்சனை முதல் அரசியல் தீர்வு வரை எந்தவிதமான முன்னேற்றகரமான தீர்வுகளும் இன்று வரை எட்டப்படவில்லை. மீள்குடியேற்றம் பூரணமாக நடைபெறவில்லை. இழப்பீடுகள் வழங்கப்பட்டு இயல்பு வாழ்கை ஏற்படுத்தப்படவில்லை. இடம் பெயர்ந்த மக்கள் இன்னும் அவலவாழ்வே வாழ்கின்றார்கள் எனவே இதற்கான தீர்வுகளை முன்வைத்து எமது அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கி தமிழர்கள், தமிழ்கட்சிகள் ஒரு பலமான சக்தியாக நகர்ந்தால் ஆரோக்கியத்துடன் பயணிக்க முடியும் இல்லையேல் மீண்டும் தமிழ் மக்கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்படுவர்.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்கள் தங்களுடைய அபிலாசைகளை தெரிவித்து வந்துள்ளார்கள். ஆனால் அன்று முதல் இன்று வரை தமிழ் மக்களின் ஒன்றுபட்ட சக்தியை உடைத்து சிங்கள தேசம் மதிநுட்பத்துடன் செயலாற்றி தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை வழங்க மறுத்து வருகின்றது. இவ்வேளையில் இனியாவது நாம் ஒன்று பட்ட மக்கள் சக்தியாக அரசியல் சக்தியாக தமிழ் மக்களின் நலன்களை வென்றெடுப்பதே சாலச் சிறந்தது.

பல நூற்றாண்டு காலமாய் தோல்விகளே தொடர் வரலாறாய் தொடர்கின்றது. எமது அரசியல் தலைவர்கள் முதல் இன்று வரை தமிழர்களின் இராஜதந்திர நகர்வுகள், உரிமைப் போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்டு சிங்களதேசம் இன்றும் இறுமாப்புடன் மார் தட்டி நிற்கின்றது. இன்று தமிழ்மக்களின் நிலை பரிதாபகரமான கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் புலம் பெயர் மக்கள் ஒன்றுபட்ட சக்தியாக தாயக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தாயக மக்களுக்கு பக்க பலமாக கரம்கோர்க்க வேண்டும்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வீழ்ந்தவர்களையும், இராணுவ நடவடிக்கைகளால் வீழ்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் தியாகங்களையும் எண்ணி நாம் செயற்பட வேண்டும். கடந்த கால தோல்விகளையும் தவறுகளையும் பாடமாகக்கொண்டு புதிய கட்டத்திற்கு நாம் நகரவேண்டும். காலத்துக்கேற்றவாறு ஒரு புதிய வியூகத்தை வகுத்து எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.

வரலாறு நதி எம்மை ஒரு கசப்பான இடத்தில் நிறுத்தினாலும் நாம் ஓர் இடத்தில் தேங்க முடியாது மீண்டும் ஓடவேண்டும். புலத்து தமிழர்களும் தாய்நிலத்து தமிழர்களும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.

சிறீலங்கா அரசு தமிழ்மக்களின் அதிகாரப்பகிர்வை பகிர்ந்தளிக்கத் தவறின் மீண்டும் தமிழ் மக்கள் விரத்தியடைந்து மாற்று வழிகளை நாடுவார்கள். எனவே தமிழ் கட்சிகள் தங்கள் பகமைகளை மறந்து இனத்தின் விடிவுக்காக ஒன்றுபட வேண்டும். இலங்கையில் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளும், புலத்தில் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளும் கூட்டாக சேர்ந்து ஒரு குழுவை அமைத்து இலங்கை அரசுடன் சர்வதேச அனுசரணையுடன் பேசி நிரந்தரமான தீர்வுத்திட்டத்தை கோரி தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்கு போராடவேண்டும்.

இதன் முதற் கட்டமாக இலங்கை சனாதிபதி மகிந்த ராஜயபட்ச அவர்கள் அரசியல் கைதிகளையும் இலங்கை தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்களையும் விடுதலை செய்து தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் மனிதாபிமானப் பணிகளை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும். எனக் கோரி
எமது மக்களின் சுதந்திரமான சுயமான வாழ்வு மலர அனைத்து சர்வதேச உறவுகளின் உதவிகள் கிட்டும் என்ற நம்பிக்கையுடன் உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன் நன்றி வணக்கம்.

செ.சுந்தரவேல்
தமிழர் புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் பணிப்பாளர்