செய்திகள்

யூன் 20 அகதிகள் தினத்தை முன்னிட்டு பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வெளியிடும் செய்தியறிக்கை
18.06.2009
தடுத்துவைக்கப்பட்டுள்ள 300000 மக்களிற்காக குரல்கொடுப்போம் உறவுகளே வாருங்கள்!

சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் வவுனியா மற்றும் யாழ்;குடா நாட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறீலங்கா இராணுவத்தின் சுற்றிவளைப்பில் உள்ள இடம்பெயர்ந்தோரிற்கான தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைகள் உடன்பாடுகளுக்கும் முரணாக சிங்கள இராணுவ அதிகாரிகளின் நேரடி நிர்வாகத்தின் கீழ் முள்வேலியிடப்பட்ட வவுனியா காட்டுப்பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இம்மக்கள் வார்த்தைகளினுள் அடங்காத துன்பங்களுடன் இந்த தடுப்புக்காவலில் வாழ்ந்து வருகின்றனர்.

ஒருபுறம், இம்மக்களின் நாளாந்த தேவைகளான உணவு, உடை போன்றனவற்றினையும், மருத்துவ வசதிகளையும் பூர்த்திசெய்ய மறுக்கும் சிறீலங்கா அரசு மறுபுறம் சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் இம்மக்களுக்கு உதவுவதை தடுத்தும் - மறுத்தும் வருகின்றது.

இன்று இம்மக்கள் குடிநீரிற்காக காத்திருப்பதும், பெண்கள் கழிப்பறைகள் இல்லாது துன்புறுவதும், சிறுவர்களும் - வயோதிபர்களும் தகுந்த கூடாரமோ கொட்டகையேயின்றி வேதனையுறுவதும் எம் அனைவரினது கரிசனைக்கும், செயற்பாட்டிற்கும் உரிய விடயமாகிவிட்டது.

போரில் காயமடைந்தோர், பெரும் மனவுளைச்சலுக்குள்ளாகி துன்புறுவோர்;, மற்றும் பிற மருத்துவ உதவிகள் பெறவேண்டியவர்கள் என பலதரப்பு பொதுமக்களும் தகுந்த மருத்துவ உதவிகளின்றியும், வைத்தியசாலைகளுக்கு போவதற்கான அனுமதியின்றியும் நோய்பீடித்து வாழ்வது புலம்பெயர்ந்த அனைத்து எம்முறவுகளினதும் கவனத்திற்குரிய முக்கிய பிரச்சனையாகிவிட்டது.

இவ்வாண்டில் மட்டும்; முப்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் போரில் படுகொலை செய்யப்பட்டும் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக உள்நாட்டு மற்றும் சர்வதேச மனிதாபிமான நிறுவனங்களின் கணிப்புக்கள் பதிவுசெய்கின்றன. மேலும், வவுனியா இராணுவத்தின் சுற்றிவளைப்பில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களிலிருந்து பதின்மூவாயிரத்துக்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் முகாம்களில் இருந்து காணாமல் போயுள்ளமையை சர்வதேச - உள்நாட்டு தகவல்கள் உறுதிசெய்கின்றன. சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் முடக்கப்பட்டமையும், ஐநா நிறுவனங்கள் கடும் அழுத்தங்களின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியினை மட்டும் கொண்டுள்ளமையாலும் இன அழிப்பு என சர்வதேச சட்டங்களால் வகைப்படுத்தப்படத்தக்க இந்த கொடிய குற்றங்கள் தொடர்பான பாரபட்சமற்ற பதிவுகள் முழுமைபெற முடியாதுள்ளது.

-------

தற்போது சிறீலங்கா அரசினால் அமைக்கப்பட்ட முகாங்களில் 270785 பொதுமக்கள் தடுத்துவைக்கபட்டுள்ளதாக உத்தியோகபூர்வத் தகவல்கள் கூறுகின்றன. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள முகாம்களில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். வவுனியா மனிக்பாம் முகாம் எனும் கிராமத்தில் உள்ள 6 முகாம்கள் உள்ளடங்கலாக 29 முகாம்களிலும், ஏனைய பாடசாலைகள் மனிக்பாம் வலயம் 2 முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாழ்மாவட்டத்தில் 11 முகாம்களிலும் திருகோணமலை மற்றும் மன்னார் முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலை, மன்னார் வைத்தியசாலை, அனுராதபுரத்திலுள்ள பதவியா வைத்தியசாலை, பொலன்னறுவை வைத்தியசாலை, கண்டி வைத்தியசாலை, மகரகம வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாசலம், ஆனந்த குமாரசுவாமி, இராமநாதன் மற்றும் வலயம்-4 ஆகிய முகாம்களில் இறுதியாக இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு மிகமோசமான சூழல் நிலவுகின்றது. அடிப்படை உதவிகள் இம்மக்களுக்கு மிகக் குறைவாக இருக்கின்றது எனவும், உணவு - உடை - குழந்தைகளுக்கான சத்துணவு - குழந்தைகளுக்கான பால்மா - பெண்களுக்கான சுகாதார உடைகள் மற்றும் சவர்காரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளிற்கான பற்றக்குறை இங்கு அதிகமாக இருக்கிறது.

--------

அன்புள்ள பிரான்சுவாழ் உறவுகளே,

இம்மக்களை சுதந்திரமாக அவர்களின் சொந்த வாழ்விடங்களில் சுயமாக வாழவைப்பதற்கான முயற்சிகளிற்கு முன்னுரிமை கொடுத்து செயற்படல் வேண்டும் என்பதையும், அதற்கான பணிகளுக்கு தார்மீக ஆதரவையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்கிடல் வேண்டும் என்பதையும் நாங்கள் அனைவரும் பொதுஉடன்பாடாகக் கொள்ளல் வேண்டும்.

இதனடிப்படையில் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் சிறீலங்கா அரசுவிடம் நாங்கள் முன்வைக்க வேண்டிய முக்கிய விடயங்கள்:

1. சர்வதேச சட்டங்கள், குறிப்பாக இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான சர்வதேச நியதிகளுக்க அமைய தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மக்களும் தத்தமது சுயவிருப்பத்தின் அடிப்படையில் வாழ்விடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புக்களை சிறீலங்கா அரசு வழங்கிடல் வேண்டும்.

2. பொதுமக்களின் குடியிருப்புகள் - மருத்துவமனைகள் - பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் - பொதுநிர்வாக கட்டங்கள் ஆகியவற்றில் இருந்து இராணுவத்தை விலக்கி உடனடியாக தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள் மீளக்குடியமர அனுமதித்தல் வேண்டும்.

3. ஐ.நா மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை இடம்பெயர்ந்தவர்களுக்கான மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட அனுமதித்தல் வேண்டும்.

4. இராணுவச் சோதனைச்சாவடிகளை மூடி பொதுமக்களை சுதந்திரமாக இயல்புவாழ்கைக்கு திரும்ப அனுமதித்தல் வேண்டும்.

5. உணவு மருந்து மற்றும் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் போன்றவை பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு ஓழுங்காக சென்றடைய அனுமதித்தல் வேண்டும்.

6. இம்மக்களின் சுயமான பொருளாதார வாழ்க்கைக்கும், அரசியல் செயற்பாடுகளுக்குமுரிய உரிமைகளை அங்கீகரித்து - அனுமதிக்க வேண்டும்.

7. அறுபதுவருடங்கள் நீடிக்கும் இனமுரண்பாட்டினை தீர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் உரிமைகளுக்கு அடிப்படையாகத் திகழக்கூடிய அரசியல் தீர்வு முயற்சியில் சிறீலங்கா அரசு ஈடுபடல் வேண்டும் என்பதுடன், அந்தத்தீர்வின் அடிப்படையாகத் திகழக்கூடிய தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச நியதிகளின் அடிப்படையில் அங்கீகரித்தல் வேண்டும்.

ஒன்றிணைவோம் சேவைசெய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்

<<<