வன்னிப் பகுதியில் அகதிகள் தொடர்ந்தும் மரநிழல்களில் தஞ்சம்: கிளிநொச்சி வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு
17-08-2008 தமிழ்வின்
வன்னிக்குச் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வருவதால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தொண்டர் நிறுவனங்களின் உதவிகள் பெருமளவில் கிடைக்கவில்லை.
இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்குவதற்காக வன்னிக்குக் கொண்டு செல்வதற்காகப் பெருந்தொகையான கூடாரங்கள் பாய்கள் படுக்கை விரிப்புக்கள் நீர்த்தாங்கிகள் உணவுப்பொருட்கள் என்பன வவுனியாவிலுள்ள தொண்டர் நிறுவனக் களஞ்சிய சாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஓமந்தையில் இராணுவம் விதிக்கும் கட்டுப்பாடுகளால் இவற்றை வன்னிக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
இதனால் வன்னியில் இடம்பெயர்ந்த பெருமளவிலான மக்கள் மரங்களின் கீழ் தஞ்சமடைந்துள்ளனர்.மரங்களின் நிழலிலேயே உணவைச் சமைத்தும் உறங்கியும் வருகின்றனர்.
இடம்பெயர்வோர் தொகை அதிகரித்து வருவதால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. குடிநீருக்கும் பெரும் கஷ்டநிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்பு உயர்மட்ட மாநாட்டில் இடம்பெயர்ந்தோரின் நிலைபற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் கிளிநொச்சி அரசாங்க அதிபர் வேதநாயகம் வவுனியா அரசாங்க அதிபர் சண்முகம் மன்னார் அரசாங்க அதிபர் நீக்கிலாஸ்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டு இடம்பெயர்ந்தோர் படும் அவலங்கள் குறித்து விளக்கமளித்துள்ளனர்.
இதனையடுத்து ஓமந்தையூடாக அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு நாளாந்தம் 20 லொறிகள் வன்னிக்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக மாநாட்டில் கலந்துகொண்ட அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடம்பெயர்ந்து அகதிகளாக வருவோருக்குத் தேவையான உணவு கூடாரங்கள் என்பவற்றை நிறுவனங்கள் வழங்கி வருவதாகவும் அரசாங்க அதிபர் வேதநாயகம் மேலும் தெரிவித்தார்.
கிளிநொச்சி நிலைமை குறித்து அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில்:
மோதல்கள் காரணமாக மக்கள் நாளாந்தம் இடம்பெயர்ந்து வருகின்றனர். இவர்களுக்கான இருப்பிட வசதிகளை வழங்குவதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இடம்பெயர்ந்து வருவோருக்குச் சமைத்த உணவை நாம் வழங்கி வருகிறோம். உலக உணவுத் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இயன்றளவு கொட்டில்களை அமைத்தும் கூடாரங்களை வழங்கியும் இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம். மல சலகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் பெரும் சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமையுள்ளது. தொடர்ந்து மக்கள் இடம்பெயர்ந்து வருவதால் பெரும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெரும் எண்ணிக்கையிலானோர் இடம்பெயர்ந்து வருவதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். பெரும் இக்கட்டான நிலையில் இடம்பெயர்ந்து வருவோரின் பிரச்சனைகளைச் சமாளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சில அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இவ்வருட காலாண்டிற்குத் தேவையான மருந்து வகைகளின் ஒரு தொகுதி வந்து சேர்ந்துள்ளபோதிலும் ஆஸ்மா சயரோகம் ஆகிய நோய்களுக்கான மாத்திரைகள் சிறுவர்களுக்கான பாணி மருந்துகள் பனடோல் போன்ற மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரதி சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் பி. பிரைட்டன் தெரிவித்துள்ளார்.
<<<