வன்னியில் ஒன்றரை இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து அல்லற்படுவதாக புகார்
17-08-2008 தமிழ்வின்
இலங்கையின் வடக்கே வன்னிப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக அந்தப் பிரதேசத்தினுள் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகக் கிளிநொச்சிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வீதியோரங்களில் மர நிழல்களில் பொது இடங்களில் தங்கியுள்ள இவர்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருவதாகவும் இவர்களுக்குத் தேவையான அடிப்படை சுகாதார வசதிகளை வழங்குவது கடினமாகியிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்ச்சியான எறிகணை வீச்சுக்கள், விமானக் குண்டுத் தாக்குதல்கள் காரணமாகவும் வேறு பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவும் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
<<<