செய்திகள்

மூன்று லட்சம் மக்களை சிறிலங்கா அரசு சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
13-06-2009

போரினால் இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களை சிறிலங்கா அரசாங்கம் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போரினால் இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களை சிறிலங்கா அரசாங்கம் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளது. அரசாங்கம் இந்த நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

வடபகுதியில் நடைபெற்ற போரில் இடம்பெயர்ந்த மக்களை ஒரு வருடத்திற்கும் மேலாக சிறிலங்கா அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது.

குடும்பங்களாகவும் மக்கள் படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது அனைத்துலக சட்டங்களை மீறும் செயலாகும். இந்த வருடத்தின் இறுதிக்குள் முகாம்களில் உள்ள மக்கள் தமது இடங்களுக்கு செல்லலாம் என அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.

ஆனால், அதற்கான நடவடிக்கைகளை அது மேற்கொள்ளவில்லை என்பதை பார்க்கும்போது அவர்கள் மக்களை காலவரையறையின்றி தடுத்துவைக்க திட்டமிட்டிருக்கலாம் என்ற கருத்துக்கள் தோன்றியுள்ளன.

இடம்பெயர்ந்துள்ள மக்களும் சிறிலங்காவில் உள்ள ஏனைய மக்களின் உரிமைகளை கொண்டவர்கள்.

இடம்பெயர்ந்த மக்களில் இருந்து விடுதலைப் புலிகளை கைது செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டாலும் கைது செய்யப்படுபவர்கள் எழுந்தமானமாக தடுத்துவைக்கப்படுவது அனைத்துலகத்தின் விதிகளை மீறும் செயலாகும்.

தேவையற்ற முறையில் மக்களின் சுதந்திரமான நடமாட்டங்களை தடுத்தல் கூடாது. அதாவது, கைது செய்யப்படுபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

2008 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை சிறிலங்கா அரசு தடுத்து வைத்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<<<