செய்திகள்

இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது அடிப்படை உரிமை மீறல்: ஆட்சேபித்து உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல்
13-06-2009

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களை, முகாம்களில் தடுத்து வைத்திருப்பது அடிப்படை உரிமை மீறல் எனத் தெரிவித்து, அதற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் ஒரு மனுவை, மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து சார்பில் சட்டத்தரணி நிலாந்தி டி.சில்வா நேற்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை இடம்பெயர்ந்து கொடிகாமம் மற்றும் வவுனியா முகாம்களில் தங்கியுள்ள ஐவர் சார்பில், சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜா, அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்று முன்தினம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஜெகத் பாலபட்டபென்டி, சந்திரா ஏக்கநாயக்கா ஆகியோரைக்கொண்ட ஆயம், ஆட்சேபனைகளை எதிர்வரும் பதினேழாம் (17) திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாற்றுக்கொள்கை நிலையத்தின் மனு

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நலன்புரி நிலையங்களில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மனுத்தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்துவின் சட்டத்தரணி நிலாந்தி டி.சில்வா நேற்றுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ளவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அவசரகாலச்சட்டத்தின் 19(1) என்ற விதியின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இது சட்ட விரோதமான செயற்பாடு. இதனால் அந்த மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன.

இடைக்காலத் தடைக்கு உத்தரவிட விண்ணப்பம்

அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் சுதந்திரம், சம அந்தஸ்து, பொதுச் சுதந்திரம் என்பன இவ்வாறான தடுத்து வைத்தல் மூலம் மீறப்பட்டுள்ளன.

இவர்கள் சுதந்திரமான முறையில் வெளியில் நடமாட தடை விதித்திருக்கும் நடைமுறைக்கு எதிராக ஒரு இடைக்கால உத்தரவை நீதிமன்றம் விடுக்கவேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஐவரின் சார்பிலான மனு

கொடிகாமம், வவுனியா ஆகிய இடங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்தவர்களில் ஐவர் சார்பாக சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஜெகத் பாலபட்டபென்டி, சந்திரா ஏக்கநாயக்க ஆகியோர் கொண்ட ஆயமே இந்தமனுவை ஆராய்ந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது.

பிரஸ்தாப மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் தமது ஆட்சேபங்களை எதிர்வரும் 17 ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கொடிகாமம் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணிக்கராஜா சிவபாக்கியம், சோபிகா சுரேந்திரநாதன், வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஜெயராணி சுரேந்திரநாதன், பொன்னுச்சாமி சுரேந்திரநாதன், நேசனா சுரேந்திரநாதன் ஆகியோர் சார்பில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர்களின் உறவினரான சட்டத்தரணி அன்னபாக்கியம் சிதம்பரப்பிள்ளையின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் யாழ்.அரச அதிபர், தென்மராட்சி பிரதேச செயலர், யாழ்.படைகளின் தளபதி, பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், பட்டாணிச்சிப் புளியங்குளம் கிராம சேவையாளர், வவுனியா பிரதேச செயலர், வவுனியா அரச அதிபர், வவுனியா சைவப்பிரகாச நலன்புரி நிலைய கிராம சேவையாளர், வன்னி படைகளின் தளபதி, நலன்புரிநிலைய இணைப்பதிகாரி ஆகியோர் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

இவர்கள் புளியம்பொக்கணையில் இருந்து விசுவமடுவுக்கு கடந்த டிசெம்பர் மாதம் இடம்பெயர்ந்தனர். அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த மோதலால் அவர்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.

மனுதாரர்களில் ஒருவரான சிவபாக்கியத்துக்கு 68வயது. மற்றொரு மனுதாரரான ஜெயராணி கிளிநொச்சி கல்வி வலயத்தில் பணியாற்றி வந்தவர், ஜெயராணியின் கணவரான சுரேந்திரநாதன் பரந்தன் ப.நோ.கூ.சங்கத்தில் பணியாற்றி வந்தார். சோபிகா, நேசனா ஆகியோர் அவர்களின் பிள்ளைகள். அவர்களது மகன்மார் 13, 10 வயதுகளை உடையவர்கள்.
கோயிலடியில் ஷெல் வீழ்ந்ததால் குடும்பத்தினர் பிரிந்தனர்

நலன்புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

சுதந்திரபுரம் பிள்ளையார் கோயில் பகுதியில் செஷ்கள் வீழ்ந்ததால் பாதுகாப்புத் தேடி ஒடியதால் குடும்பம் பிரிந்து விட்டது. கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி குடும்பத்தில் ஒரு பகுதியினர் விசுவமடுவுக்கும் மற்றப் பகுதியினர் புதுமாத்தளனுக்கும் சென்று விட்டனர்.

அதன் பின் 2 ம், 3 ம், 5 ம் மனுதாரர்களை இராணுவம் பிடித்து வவுனியா சைவப்பிரகாச வித்தியாசாலை நலன்புரி நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

மாணிக்கராஜா சிவபாக்கியமும், சோபிகாவும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு படகு மூலம் கூட்டிச்செல்லப்பட்டனர்.

பின்னர் சாவகச்சேரி இந்து மகளிர் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டனர். அங்கிருந்து கொடிகாமம் நலன்புரி நிலையத்துக்கு மாற்றப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டனர்.

மாணிக்கராஜா சிவபாக்கியம் வேப்பங்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.அவரது பேர்த்தியான சோபிகா அவருடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 13 வயதுடையவர் என்ற காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த நிலையில் உள்ள சோபிகாவை விட்டு அவர் செல்லாமல் தொடர்ந்தும் கொடிகாமம் முகாமில் தங்கியுள்ளார்.

மனுதாரர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் உள்ளனர். முகாம்களில் இருந்து மனுதாரர்கள் விடுவிக்கப்பட்டால் குடும்பத்தினர் ஒன்றாக வாழ அவர்கள் ஏற்பாடு செய்வார்கள். எனவே அவர்கள் ஒன்றிணைவதற்கு நீதிமன்றம் ஏற்பாடு செய்ய வேண்டும் இப்படி மனுவில் கோரப்பட்டுள்ளது.

<<<