செய்திகள்

இலங்கையில் 6 லட்சம் அகதிகள் உள்ளனர்: ஐக்கிய நாடுகள் அமைப்பு
12-06-2009

இலங்கையில் துரிதமாக மீள குடியமர்த்தப்பட வேண்டிய 660,000 இடம்பெயர்ந்த மக்கள் வசிப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான மனித உரிமைகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரையும், தமது சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கு, தனியார் துறையினரின் ஒத்துழைப்பும் அவசியம் என அதன் பிரதிநிதி எமின் எவாட் தெரிவித்துள்ளார்.

இந்த தொகை மிகவும் அதிகரித்த எண்ணிக்கை எனவும், அவர்களின் மீள் குடியமர்த்தல் பணிகள் மிகவும் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கை அரசாங்கம், மேல் மாகாணம் தவிர்ந்த மற்றைய மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டுமான நடவடிக்கைகளில் சரியான நடைமுறையினை பின்பற்றியிருக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மைய மோதல்களில் மாத்திரம், 300,000 க்கும் அதிகமான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அத்துடன் ஏற்கனவே மோதல்களினால் இடம்பெயர்ந்த நிலையில் மன்னார் போன்ற பகுதிகளிலும் பொது மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை மீளக் குடியமர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும், அவை துரிதகதியில் நடத்தப்படுகின்றனவா என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை முகாம்களில் உள்ள மக்களின் வைத்திய நடவடிக்கைகளுக்கான அடிப்படை வசதிகள் மிகவும் தாழ்ந்த மட்டத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அநேகமான வைத்தியசாலைகளில் சீரான நீர்ப்பாசன வசதி இல்லாத நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனைக் கருத்தில் கொண்டு, தனியார் துறையினருடன் இணைந்து வைத்தியசாலைகளுக்கான சீரான நீர்ப்பாசன திட்டத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

<<<