செய்திகள்

வட இலங்கை முகாம்களில் மக்கள் நீண்ட நாட்கள் தங்க நேரிடலாம் என்று ஐ. நா அதிகாரி கவலை
11-06-2009 BBC Tamil

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற போரின் இறுதி கட்டத்தில் இடம் பெயர்ந்த பொதுமக்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இடைத்தங்கல் முகாம்களில் நீண்ட நாட்கள் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடும் என்று தாங்கள் கவலைப்படுவதாக, இலங்கையின் பணிபுரியும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் இருக்கக்கூடிய இடம்பெயர்ந்த பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் அரசு குறிப்பிட்டிருக்கும் ஆறு மாத காலத்துக்குளேயோ அல்லது இந்த ஆண்டின் இறுதிக்குள்ளோ தமது சொந்த இடங்களுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு இருப்பதாக இலங்கை இராணுவம் எதிர்பார்க்கவில்லை என்று இலங்கையில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியான மார்க் கட்ஸ் தெரிவிக்கிறார்.

இந்த இடம்பெயர்ந்த நிலையிலிருக்கும் மக்கள் ஆறு மாதங்களுக்குள்ளோ அல்லது இந்த ஆண்டின் முடிவுக்குள்ளோ இந்த மக்கள் தமது இருப்பிடங்களுக்கு செல்வார்கள் என்று அரசு தங்களுக்கு உறுதியளித்துள்ள போதிலும், தமக்கு இது தொடர்பில் மாறுபட்ட சமிக்னைகளே கிடைக்கின்றன என்றும் அவர் கூறுகிறார்.

தற்போது அங்கிருக்கும் கூடாரங்களை நிரந்தர கட்டிடங்களாக மாற்றியமைக்கும்படி அங்குள்ள உள்ளூர் அதிகாரிகள் தம்மிடம் தெரிவிக்கிறார்கள் என்றும், மூத்த இராணுவ அதிகாரிகளும்கூட, அடுத்த ஆறு மாதங்களில் பெருமளவிலான மக்கள் தமது இடங்களுக்கு திரும்புவார்கள் என்று தமக்கு தோன்றவில்லை என்று கூறுவதாகவும் ஐக்கிய நாடுகளின் அதிகாரியான மார்க் கட்ஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

எனினும் அங்குள்ள மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படும் வரையில் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதின் கூறுகிறார்.

<<<