செய்திகள்

வவுனியா முகாம்களில் 16 நாட்களில் மரணமடைந்த 11 சிசுக்கள் உட்பட 62 பேரின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலை பிரேத அறையில்
11-06-2009

வவுனியா முகாம்களில் கடந்த 16 நாட்களில் மரணமடைந்த 11 சிசுக்கள் உட்பட 62 பேரது உடல்கள் வவுனியா அரசினர் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் 9 ஆம் திகதி வரையான 16 நாட்களில் உயிரிழந்தவர்களின் உடல்களே இவையாகும்.

இந்த 62 பேரில் பெரும்பாலானோர் செட்டிகுளம் மெனிக் பார்ம் முகாம்களைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் வவுனியாவின் ஏனைய பகுதிகளிலுள்ள முகாம்களைச் சேர்ந்தவர்கள்.

நோய், போதிய பராமரிப்பின்மை, போசாக்கு குன்றியமை காரணமாகவே இதில் பெரும்பாலானோர் இறந்துள்ளனர்.

இந்த 62 சடலங்களில் 51 சடலங்கள் வயோதிபர்களுடையது. இவர்களது குடும்பத்தவர்கள் இவர்களைப் பிரிந்து வெவ்வேறு முகாம்களில் இருப்பதால் இவர்கள் இறந்த விபரங்களும் குடும்பத்தவர்களுக்கு தெரியாதுள்ளது.

இவ்வாறு இறப்போரின் உடல்களை அடையாளம் காட்டவோ இறுதிக் கிரியைகளைச் செய்யவோ எவருமே வராத நிலையில் அனைத்துச் சடலங்களும், ஒரே குழிகளில் போடப்பட்டு புதைக்கப்படும் நிலையே காணப்படுகிறது.

வன்னியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இவ்வாறு நூற்றுக்கணக்கான வயோதிபர்கள் மரணமடைந்துள்ளனர்.

சிசுக்கள் யாவும் பிறப்பின்போது மரணித்தவையென ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆஸ்பத்திரி சவச்சாலையில் இடவசதியின்மை காரணமாக இந்த சடலங்களை நீதிமன்றத்தின் அனுமதியுடன் அரச செலவில் அடக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

<<<