வன்னியில் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள் உடனடியாக தேவை - ஐ.நா. தெரிவிப்பு
05.11.2008

வன்னியில் இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்தும் ஒழுங்கான தங்குமிடங்கள் இன்றிய நிலையில் உள்ளனர். அங்குள்ள 20 ஆயிரம் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள் உடனடியாகத் தேவைப்படுவதாக ஐ.நா. முகவர் நிறுவனங்களின் நிலையியற் குழு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி நகரப் பகுதியில் விமானத் தாக்குதல் களும், கடும் ஷெல் தாக்குதல்களும் இடம்பெறுவதாகவும் ஐ.நா.மேலும் தெரிவித்துள்ளது. வன்னி நிலைவரம் தொடர்பாக ஐ.நா. முகவர் நிறுவனங்களின் நிலையியற் குழு மேலும் தெரிவித்துள்ளதாவது: கிளிநொச்சி நகரப் பகுதி மீது விமானத் தாக்குதல்களும் கடும் ஷெல் வீச்சுக்களும் இடம்பெறுகின்றன. நகரப்பகுதிக்கு அண்மையில் இருதரப்புக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன. இடம் பெயர்ந்துள்ள பெருமளவிலான மக்கள் ஒழுங்கான தங்குமிடங்கள் இன்றிய நிலையிலுள்ளனர். தற்போது ஆயிரக்கணக்கானோர் தற்காலிக கூடாரச் சீலைகளை ( ரறப்புலின்) தொண்டு நிறுவனங்களிடம் பெற்று வருகின்றனர்.
இடம்பெயர்ந்துள்ள 20 ஆயிரம் குடும்பங்களுக்கு உடனடியாக தற்காலிக தங்குமிடங்கள் தேவையாக உள்ளன. ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான மருந்துப் பொருட்கள் கிளிநொச்சி வைத்தியசாலையை வந்தடைந்துள்ள போதும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான மருந்துப் பொருட்கள் இதுவரை கிடைக்கவில்லை. கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளரால் தர்மபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுகாதார நிலையத்தின் வெளிநோயாளர் பிரிவில் நாளாந்தம் 900 நோயாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
தற்போது 300 நோயாளிகள் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் இரண்டாவது உணவு வாகனத் தொடரணி மூலம் கிளிநொச்சியை அடைந்த உணவுப் பொருட்கள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக 38 ஆயிரத்து 763 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ..சி.ஆர்.சி.)7ஆயிரம் தற்காலிக கூடாரச் சீலைகளை வழங்கியுள்ளது. அத்தோடு 2 ஆயிரம் சுகாதார பொது வசதிகளையும் ஐ.சி.ஆர்.சி. வழங்கியுள்ளது.
<<<