செய்திகள்

தாயக உறவுகளின் துயர் துடைக்கும் தனித்துவமான ஆறுதல் ஆற்றுகை புனிதப்பணி...
11-07-2009 தமிழர் புனர்வாழ்வுக் கழகம் -பிரான்ஸ்

கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக ஈழத்தில் இருந்து கேட்கும் அவலக்குரல்களுக்கு ஆதரவுக்கரம் கொடுக்கும் ஒரே நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டு அதன் பாரிய வளர்ச்சிப் பாதையில் தனது பணியினைச் செவ்வனே செயற்படுத்தி அதன் மூலம் சர்வதேசங்களின் நன்மதிப்பையும் பாராட்டுக்களையும் பெற்று இன்றும் தனது சேவையைத் தொடர்ந்துகொண்டிருக்கும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் கடந்த 11வருடங்களாக தமிழர் விளையாட்டு விழா எனும் நிகழ்வை வருடாவருடம் நடாத்துவதன் மூலம் தாயக உறவுகளை மனதில் நினைந்து பிரான்ஸ் வாழ் தமிழர்கள் அனைவரும் வருடத்தில் ஒரு முறை ஒன்றாக ஒன்று கூடவும் அதனுடாக அன்று கிடைக்கும் நிதியின் மூலம் தேவையான உதவிகளை தாயக உறவுகளுக்கு வழங்கும் நடவடிக்கையையும் செய்து வருகின்றது.

அந்த வகையில் இந்த வருடம் தாயகத்தில் இடம்பெற்ற பாரிய அழிவுகளும் உயிர் இழப்புகளும் உறவுகளின் அவலக் குரல்களும் ஒருங்கே புலம்பெயர் உறவுகளிடையே மனோவியல் ரீதியாக ஓர் பாதிப்பினை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாது அந்த சோக சம்பவத்தின் நினைவுகளில் இருந்தும் அதன் வடுக்களில் இந்தும் விடுபடமுடியாத நிலையில் அதனின்றும் ஆறுவதற்கும் ஏனையோருக்கு ஆறுதல் கூறும் வகையிலும் இந்த வருடம் இந்நாளை ஆறுதல் - ஆற்றுகை எனும் நாளாக பிரகடனப்படுத்தி அதனை சிறப்பாகச் செய்ய 05.07.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பாடகி இருந்தது. இந்த விழாவிற்கான உதவிகளை உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் சிறப்பாக வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அதற்காகக் கடந்த காலங்களைப் போன்று இவ்வருடமும் டுனி மாநகரத்தின் அருகாமையில் உள்ள லூ-பூர்ஜே விமானத்தளத்தின் அருகாமையில் உள்ள மைதானத்தில் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினால் சிறப்பான முறையில் ஒழங்குபடுத்தப்பட்டடிருந்தது. அதற்கான பணிகள் யாவும் முதல் நாளன்றே புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள் தொண்டர்கள் கலைபண்பாட்டுக்கழக உறுப்பினர்கள் பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினர்கள் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் இளையோர் அமைப்பு உறுப்பினர்கள் சமூகஆர்வலர்கள் அனைவரினதும் சிறப்பான சேவைகளால் அவை பூரணமாக்கப்பட்டிருந்தது. 5ம் திகதி காலை 9.30 மணிக்கெல்லாம் விழா களைகட்டும் நிலையை எட்டியதோடு குறித்த நேரத்திற்கு பெருந்திரளான புலம்பெயர் தமிழ் உறவுகளும் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்களும் கறுப்பு – வெள்ளை நிறத்திலான சீருடை அணிந்த நிலையில் மைதானத்தை நிரப்பியிருந்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக வரவழைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் அரசமைப்பின் பிரதிநிதிகள் பலரும் அங்குபிரதம அதிதிகளாக வருகைதந்திருந்தனர். அந்த வகையில் பாரிசின் புறநகர் பகுதியான ஒபேவில்லியே நகரபிதா> மாநகர உறுப்பினர்கள் மற்றும் சென்தெனிஸ் நகரசபை உறுப்பினர்கள்> லாக்கூர்நெவ் பாராளுமன்ற உறுப்பினர்> டுனி நகர உறுப்பினர்கள்> கச்சித் தலைவர்கள் என அங்கு வருகைதந்திருந்தோரை பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் திரு நா.பாலச்சந்திரன் செயலாளர் திரு.ரவீந்திரன் உபதலைவர் திரு.கோணேஸ்வரன், பொருளாளர் திரு.கிருபாகரன் இவர்களுடன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொறுப்பாளர் திரு. சுந்ரதரவேல் உட்பட கழக உறுப்பினர்கள் அனைவரும் திரளாக நின்று வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து தமிழர் பாரம்பரிய கலாச்சார அணிவகுப்பான இன்னியம் கௌரவ அணிவகுப்புக் குழுவினரின் நடன நிகழ்வு சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியை சுற்றி நடைபெற்றது. தாயக விடுதலைக்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்த விடுதலைப் போராளிகள், போரினால் உயிரிழந்த உறவுகள், உயிர்நீர்த்த தன்நலமற்ற தொண்டர்கள் ஆகியோரின் நினைவாக உருவாக்கப்பட்டிருந்த அந்த நினைவுத்தூபியின் நான்குபுறத்தினதும் நுழை வயில்கள்; செங்கம்பளவிரிப்புக்களினால் அலங்கரிக்கப்படிருந்தது.

ஈகைச்சுடரினை தமிழர் புனர்வாழ்வக்கழகப் பொறுப்பாளர் திரு. சுந்தரவேல் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடாந்து, பிரான்சு நாட்டின் தேசியக்கொடியை லாகூர்னேவ் மாநகர உபதலைவர் ஸ்ரீபன் ருசோல் அவர்கள் ஏற்றிவைத்தார். அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியை சென்தெனிஸ் பகுதியின் லாக்கூர்நெவ் பாராளுமன்ற உறுப்பினர் டானியல் கொல்பெர் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் கொடியை பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் திரு. நா.பாலச்சந்திரன் அவர்கள் ஏற்றி வைத்ததுடன், நினைவுத்தூபியில் மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வினை லண்டனில் இருந்து வருகைதந்திருந்த வெண்புறா இயக்கத்தின் நிறைவேற்றுப் பொறுப்பாளர் வைத்திய கலாநிதி திரு. என்.எஸ்.மூர்த்தி அவர்கள் ஆரம்பித்து வைக்க, அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர்களும், மற்றும் தாயக உறவுகளும் மலர்வணக்கம் செலுத்தியதனைத் தொடர்ந்து, இந்து மதகுரு சார்பாக பாரீஸ் முத்துமாரி அம்மன் ஆலய பிரதான குரு பகதீஸ்வர ஐயர் அவர்களும் கத்தோலிக்க மதகுரு சார்பாக பாரீஸ் செல்லசார் தேவாலய குரு ஜெறோம் ஜோசப் அவர்களின் சிறப்பு ஆராதனை நிகழ்வுடன் கூடிய சொற்பொழிவும், சிறப்பு விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, மைதனத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின. சிறுவர், சிறுமியர்களுக்கான சங்கீதக்கதிரைப் போட்டி, முட்டியடைத்தல், உதைபந்தாட்டத்தின் முக்கிய பகுதியான தண்டனைக் கான உதைப்பு (பெனால்ற்றி கிக்) சாக்கோட்டம், பலூன் உடைத்தல், சைக்கிள் ஓட்டம். சிறுவர் பூங்கா என்பனவற்றுடன், சதுரங்கம், கரம் என்பன அங்கு வருகைதந்திருந்த எமது இளம் சந்ததியினரை வெகுவாகக் கவர்ந்திருந்ததுடன், ஆர்வத்துடன் அவர்கள் அந்த விளையாட்டுக்களில் பங்குகொண்டதுடன் பரிசுப்பொருட்களையும் களிப்புடன் பெற்றுச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது. மைதானத்தில் சிறப்பாக முகாமிடப்பட்டிருந்த தமிழ் இளையோர் அமைப்பின் காரியாலயத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள், மற்றும் ஓவியங்களை விழாவிற்கு வருகைதந்திருந்த தமிழ் மக்கள் மட்டுமல்லாது, ஏனைய சமூகத்தினரும் திரளாகச் சென்று பார்வையிட்டனர். அந்த படங்களில் இன்று தாயக உறவுகளின் நிலை மட்டுமல்லாது, கடந்தகால அவலங்களும், அவற்றின் நிலைகளும், நிலைப்பாடுகளையும் சித்தரிப்பனவாகக் காணப்பட்டன. அதனைப் பார்வையிட்ட அனைவருக்கும் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அவற்றிற்கான விளக்கங்கள், தமிழ் இளையோர் அமைப்பினால் விளக்கம் அளிக்கப்பட்டுக்கொண்டிருந்தது சிறப்பாக அமைந்திருந்தது. அத்துடன் பிரத்தியேகமாக வர்த்தக நிறுவனங்களின் விளம்பர முகாம்களும் இடம்பெற்றிருந்ததுடன், தமிழ் அமதழிக்கான மென்பொருள் விளம்பர வெளியீட்டு நிறுவனங்களும் அங்கு முகாமிட்டிருந்தமை, இன்றைய நிலையில் தமிழ்மொழியின் வளர்ச்சிப்பாங்கினை அந்த மைதானத்திலும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும். பிரான்ஸ் நாட்டின் இணையத்தள உருவாக்க நிறுவனங்களுடன், கனடாவில் இருந்து வருகை தந்திருந்த தமிழ்மொழி எழுத்துரு – அகராதி மென்பொருள் என்பன விளம்பர-விற்பனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை பலரது கவனத்தையும் கவர்ந்திருந்தது.

மதியநேரம் அங்கு அமைக்கப்பட்டிருந்த உணவுச்சாலைகளில் எமது தாயகத்தின் பாரம்பரியமான உணவவகைகள் பரிமாறப்பட்டது. தாயகத்து நினைவுகளுடன், தங்கள் உறவுகளை அருகிருத்தி அவற்றை அவலுடன் பரிமாறிய நேரத்தில் தாயக நினைவுகளும், தாளாத அன்பின் பிரதிபலிப்பையும் அவர்களிடம் காணக்கூடியதாக இருந்தது. பிற்பகலாகியதும், கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின, மைதானத்தின் மேற்குப் புறமாக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான அரங்கில் தாயக உறவுகளின் இன்னிசை நிகழ்வுகள் அரம்பமாகின. தாயக விடுதலைக் கீதங்கள், மற்றும் தத்துவப் பாடல்கள் என்பன அங்கு வந்திருந்த இசைக் கலைஞர்களினால் இசைக்கப்படட்டது. அதனை ரசிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான உறவுகள் அங்கு கூடினர்;. ஆர்வத்தடன் விழாவினைச் சிறப்பித்த இசைக்கலைஞர்களான, இந்திரன் இசைக்குழு, முத்தமிழ் இசைக்குழு, பாரிஸ் சூப்பர் ரியூனர் இசைக்குழு அனைவரும் பார்வையாளர்களின் பலத்த கரகோசத்தையும், பாராட்டுக்களையும் பெற்றக்கொண்டனர். அத்தோடு அதே அரங்கில் கவிதை, நடனம், என்பவற்றுடன், பிரான்ஸ் கலை, பண்பாட்டுக்கழகத்தினரால் வடிவமைக்கப்பட்ட தணியாத தாகம் நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகத்தில் இடம்பெற்ற கலைஞர்களின் நடிப்பின் வெளிப்பாடும், அந்த நாடகத்தின் மையக் கருத்தும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்திருந்ததுடன், தாயக நினைவுகளை இதயத்தினுள் தரவைத்தமை குறிப்பிடத்தக்கதாகும். அரங்கில் வைத்திய கலாநிதி மூர்த்தி, பேராசிரியர் ஜுலியா ஆகியோர் உட்பட சிறப்பு விருந்தினர் பலர் உரையாற்றினர்.

கனத்த இதயங்களுடனும், கண்ணீர் சிந்திய செய்திகளுடனும் கலந்துகொண்டு ஆறுதல்பட்டதோடு, தம்மை ஆற்றுகைக்குட்படுத்திக்கொண்ட உறவுகள், அடுத்த வருடச் சந்திப்பிலாவது இனிய செய்திகளுடனும், இங்கிதமான இதயத்துடனும் சந்திக் வேண்டும் என்கின்ற பிராhத்தனையுடன் ஒரவரையொருவர் அன்பின் அரவணைப்புடன் பிரிந்து சென்றனர். 2009ம் ஆண்டுக்கான இந்நாள் ஆறுதல் ஆற்றுகையாக இனிதே நிறைவுற்றது.

<<<