.
 
 

நன்றி மனோ அக்கா...!!!
14.03.2021

சுமார் மூன்று தசாப்தங்களாக தமிழீழ விடுதலைக்கான போரோடும், அதன் மனிதாபிமான விவகாரங்களுடனும் பங்கேற்ற புலத்துத் தமிழர்களின் 'ஈழத்ததாய்' திருமதி. மனோகரன் மேரி இசிடோரா மனோரஞ்சிதம் அவர்கள் எம்மைவிட்டு பிரிந்து சென்றமை ஆழத்துயரை தருகின்றது.

விடுதலைப் போராட்டத்தின் புலம்பெயர் முன்னணி செயற்பாட்டாளரான திரு. வேலும்மயிலும் மனோகரன் அவர்களின் துணைவியாக விளங்கிய மனோ அக்கா அவர்கள், பெண் போராளிகளிற்கான ஆதரவுச் செயற்பாடுகளிலும், போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களிற்கான மனிதாபிமான ஆதரவுச் செயற்பாடுகளிலும் தீவிரமாக இயங்கினாhர். தமிழ் பெண்கள் அமைப்பின் வழிகாட்டியாகவும், கலைபண்பாட்டுச் செயற்பாடுகளிற்கான ஆரம்பகால தொட்டு செயற்பட்ட உந்துவிசையாகவும் திகழ்ந்தார். மறுபுறம், புலம்பெயர் விடுதலைச் செயற்பாட்டாளர்களின் சமூக இயங்குதலுக்கான தேவைகளை புரிந்து கவனம்செலுத்தும் அன்புமிகு தாயாகவும் மனோ அக்கா திகழ்ந்தார்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்சில் முன்னெடுத்த பலவித மனிதாபிமான திட்டங்களிலும் முன்னின்று உதவிய மனோ அக்கா, பல்வேறு பணிகளுக்கு தேவைப்பட்ட தலைமைத்துவத்தினை வழங்கி மனிதாபிமான பணிகளிற்கான தனது தீராத கரிசனையை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

தனது நலிவுற்றுச் சென்ற உடல் உபதைகளுக்கு மத்தியில் தனது தளாராத மன உறுதியையும், தூய்மையான அர்ப்பணிப்பினையும் மனோ அக்கா தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்துள்ளார். ஈற்றில் அந்த புலம்பெயர்ந்தோர் ஈழத்தாய் நம்மைவிட்டு 13.03.2021 அன்று பிரிந்து சென்றுவிட்டார்.

அவரது இழப்பில் வாடும் அவரது அன்புக்கணவரும், புலம்பெயர்தமிழர்களின் மூத்த விடுதலைச் செயற்பாட்டாளருமான திரு. மனோகரன் அவர்களினதும், அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்களினதும் துயரில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் பங்கேற்கின்றது. அவருடன் செயற்பட்ட அனைத்துச் செயற்பாட்டளர்களினதும் கரங்களை இறுகப்பற்றிக் கொள்கின்றது.

நன்றி மனோ அக்கா...!!!

உடலால் மறைந்தாலும் புலம்பெயர்ந்தவர் ஈழத்தாயக அவர் என்றும்... !!!

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்

 
 
English